ஐஆர்சிடிசி இணையதளம் இன்று அதிகாலை முதல் முடங்கியுள்ளதாகப் பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் ஐஆர்சிடிசி தளம் இன்று அதிகாலை முதல் முடங்கியுள்ளது. மேலும், ஐஆர்சிடிசி செயலியும் முடங்கியதாக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான புகைப்படங்களைப் பயனாளர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், அவசரமாக பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முயலும்போது இவ்வாறு இணையதளம் மற்றும் செயலி செயலிழந்தால் எவ்வாறு பயணம் மேற்கொள்வது என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சில இடங்களில் ஐஆர்சிடிசி தளம் வேலை செய்வதாகக் கூறப்படும் நிலையில், பலர் செயலி மற்றும் இணையதளம் முடங்கிய புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்… ஊருக்குள் இன்னும் எத்தனை ஞானசேகரன்கள்?
இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, ரயிலில் பயணம் செய்வதற்காக 80 சதவிகித பயணச்சீட்டுகள் ஆன்லைன் மூலமே முன்பதிவு செய்யப்படுகிறது.
இந்த நிலையில், நீண்ட நாள்களாக தட்கல் நேரத்தில் ஐஆர்சிடிசி செயலி மிகவும் மெதுவாக செயல்படுவதாகவும், இதனால் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்ய முடிவதில்லை என்று தொடர்ந்து பயனர்கள் குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றனர்.
மேலும், உலகின் மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்ட இந்தியாவின் ரயில்வே செயலியை இடையூறு இன்றி உபயோகிக்க முடியாத சூழல் உள்ளதாகப் பயணிகள் விமர்சிக்கின்றனர்.