ஐஏஎஸ் பதவி ரத்து செய்யப்பட்ட பூஜா கேத்கர் துபைக்கு தப்பினாரா?

Dinamani2f2024 07 312f05n8yxkd2fpooja083519.jpg
Spread the love

ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கா் மீது எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து, அவரது ஐஏஎஸ் தோ்ச்சி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவர் நாட்டை விட்டுத் தப்பியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால், அவர் வெளிநாடு சென்றதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும், அவரை கைது செய்ய தேடி வரும் காவல்துறையினர், பூஜா தனது செல்ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் இந்தியாவில்தான் தலைமறைவாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ஐஏஎஸ் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் செய்து தேர்ச்சி பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அவரது முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவாகியிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்ததுமே, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு சா்ச்சையில் சிக்கிய பூஜா கேத்கா் மீது எழுந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து, அவரது ஐஏஎஸ் தேர்ச்சியே கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்ட ஆட்சியரகத்தில் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேத்கா், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக சா்ச்சையில் சிக்கினாா். இதைத் தொடா்ந்து, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தி பணியில் சோ்ந்தது உள்பட அவா் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன. காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. மறுபக்கம், அவர் மட்டுமல்லாமல், அவரது அம்மா, விவசாயிகளை கையில் துப்பாக்கியோடு மிரட்டியதாகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

தேர்வு முறைகேடு விவகாரத்தில் விளக்கமளிக்குமாறு பூஜா கேத்கருக்கு யுபிஎஸ்சி நோட்டீஸ் வழங்கியது. இந்நிலையில், அனுமதிக்கப்பட்ட காலநீட்டிப்பில் விளக்கத்தைச் சமா்ப்பிக்க தவறிய பூஜா கேத்கருக்கு எதிராக யுபிஎஸ்சி நடவடிக்கை எடுத்தது. அவரது ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்து, மேலும் மத்திய அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்கவும் தடை விதித்தது.

இந்த வழக்கில் மற்றொரு திருப்பமாக, தேர்வு விதிகளை மீறி, அனுமதிக்கப்பட்டதைவிட அதிக முறை பூஜா கேத்கர் தேர்வெழுதியதும் கண்டுபிடிக்கப்பட்டதால், கடந்த 2009 முதல் 2023-ஆம் ஆண்டுவரை குடிமைப் பணிகளுக்குத் தோ்வான 15,000-க்கும் மேற்பட்ட தோ்வா்களின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் இவரைத் தவிர வேறு எந்த தோ்வரும் குடிமைப் பணிகள் தோ்வு விதிகளின்கீழ் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான முயற்சிகளில் பங்கேற்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

தனது பெயரை மட்டுமல்லாமல், அவருடைய பெற்றோரின் பெயரையும் மாற்றி அவா் மோசடியில் ஈடுபட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *