சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆகஸ்ட் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்களை ஐசிசி இன்று (செப்டம்பர் 5) வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீராங்கனைகள் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு அம்மாதத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான விருதினை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கி வருகிறது.
ஆகஸ்ட் மாத போட்டியாளர்கள்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறப்பாக விளையாடிய வீராங்கனைகள் பட்டியலில் இலங்கை அணியின் இடக்கை பேட்டரான ஹர்ஷித் சமரவிக்ரமா, அயர்லாந்து அணியைச் சேர்ந்த வீராங்கனைகளான ஆல் ரவுண்டர் ஓர்லா பிரெண்டர்காஸ்ட் மற்றும் அந்த அணியின் எதிர்கால நட்சத்திரமாகக் கருதப்படும் வலக்கை பேட்டரான கேபி லூயிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஹர்ஷித் சமரவிக்ரமா (இலங்கை)
ஹர்ஷித் சமரவிக்ரமா அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். ஜூலை மாதத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 69 ரன்கள் விளாசிய அதே ஃபார்மில் அயர்லாந்து தலைநகரான டப்லினில் நடைபெற்ற 20 ஓவர் போட்டிகளின் முறையே 86* ரன்கள் மற்றும் 65 ரன்கள் எடுத்தார். மேலும், தொடரில் அதிக ரன்கள் குவித்தவரானார்.
அதன் தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் போட்டிகள் முறையே 19, 105, 48* ரன்கள் அடித்து அசத்தினார்.
ஓர்லா பிரெண்டர்காஸ்ட் (அயர்லாந்து)
இலங்கைக்கு எதிராக சிறப்பாக விளையாடிய அயர்லாந்து வீராங்கனை ஓர்லா பிரெண்டர்காஸ்ட் இலங்கைக்கு எதிராக 67 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 22 வயதான ஓர்லா பிரெண்டர்காஸ்ட் ஒருநாள் தொடரிலும் சிறப்பாக விளையாடினார்.
25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய இவர் 107 பந்துகளில் 122* ரன்கள் அடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 260 ரன்கள் அடித்த நிலையில் அயர்லாந்து அணி அதனை விரட்டிப் பிடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும், அனைவரும் வியக்கவைத்த நிலையில் ஆட்டநாயகி விருதையும் ஓர்லா பிரெண்டர்காஸ்ட் வென்று அயர்லாந்து அணிக்கு 2-1 என்ற கணக்கில் தொடரை வெல்ல உதவினார்.
கேபி லூயிஸ் (அயர்லாந்து)
இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் வலக்கை பேட்டரான கேபி லூயிஸ் 75 பந்துகளில் 119 ரன்கள் அடித்ததன் மூலம் அயர்லாந்து அணியில் 20 ஓவர்களில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.
அந்தப் போட்டியில் 23 வயதான கேபி லூயிஸ் 17 பவுண்டரிகள் மற்றும் 2 மிகப்பெரிய சிக்ஸர்களுடன் 119 ரன்கள் அடித்ததன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்ய முடிந்தது.