சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐஐசி தலைவரான நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே, பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பிசிசிஐ கெளரவ செயலாளராகவும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய் ஷா, டிசம்பர் 1 ஆம் தேதி ஐசிசி தலைவராக பதவியேற்கவுள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ வாழ்த்துகள் மத்திய உள்துறை அமைச்சர்! உங்களது மகனை நீங்கள் அரசியல்வாதி ஆக்கவில்லை, அதற்கு பதிலாக அதைவிட முக்கிய பதவியான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஆக்கிவிட்டீர்கள். உங்கள் மகன் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராகிவிட்டார். அவரது இந்தச் சாதனைக்கு உங்களுக்குத் தான் வாழ்த்து தெரிவிக்க வேண்டும், பாராட்டுகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.