ஐபிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை நேற்று (ஏப்.8) சாய்த்தது.
முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் சோ்க்க, சென்னை 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 201 ரன்களே எடுத்தது.
இதில் பஞ்சாப் அணியின் இளம் வீரர் ப்ரியன்ஷ் ஆர்யா 42 பந்தில் 103 ரன்கள் எடுத்து அசத்தினார். அவர்தான் ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.
அவரது ஆட்டம் குறித்து ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது:
இதுதான் எங்களது டெம்ப்ளேட்
எந்தத் திடலில் விளையாடினாலும் இதுதான் எங்களது டெம்ப்ளேட்டாக (மாதிரி வடிவம்) இருக்கிறது. எங்களிடம் வலுவான பேட்டர்கள் இருக்கிறார்கள்.
பிரியன்ஷ் ஆர்யா விளையாடிய விதம் பார்க்க ஆவலாக இருந்தது. அவர் விளையாடியது இந்த உலகத்திற்கு அப்பாற்பட்ட இன்னிங்ஸாக இருந்தது.
கடந்த போட்டியில் அவரிடம் பேசும்போது ஜோஃப்ரா ஆர்ச்சரை எதிர்கொள்வதிலும் முடிவு எடுப்பதிலும் சற்று தயக்கம் இருந்ததாகக் கூறினார்.
சிஎஸ்கேவுடன் தனது உள்ளுணர்வை பயன்படுத்தியுள்ளார். தயக்கமே இல்லாமல் விளையாடினார்.
ஃபீல்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்
இந்த அணியில் அனைவருக்கும் இந்தமாதிரியான எண்ணம்தான் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.
ஐபிஎல் வரலாற்றிலேயே நான் பார்த்த சிறந்த பேட்டிங் இதுதான். துபேவுக்கு சஹாலை பந்துவீசாதது திட்டமிட்டு செய்தேன். அது நன்றாகவும் வேலை செய்தது.
நாங்கள் எங்களது சிறந்த ஆட்டத்தை இன்னும் விளையாடவில்லை. ஆட்டத்தில் வென்றாலும் ஃபீல்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்.
ஒட்டுமொத்த அணியும் கேட்ச்சிங் செஷனுக்கு செல்ல வேண்டும் என்றார்.