ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கு: சென்னை, மயிலாடுதுறையில் 20 இடங்களில் என்ஐஏ சோதனை | NIA raids 20 places in Chennai, Mayiladuthurai

1348766.jpg
Spread the love

தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை, மயிலாடுதுறை என தமிழகத்தில் நேற்று சுமார் 20 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்றது. இதில், ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் சித்தாந்தத்தை ஊக்குவிப்பவர்கள், அந்த அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பவர்களை என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகிறது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட இந்த இயக்கத்துக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிலர் ரகசியமாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களை திரட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக தீவிரவாத சித்தாந்தத்தில் உடன்பாடு உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஒருங்கிணைத்து, அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இதையறிந்த என்ஐஏ அதிகாரிகள் இந்தியா முழுவதும் கண்காணிப்பு வளையத்தை விரிவுபடுத்தினர்.

சில நாட்களாக என்ஐஏ அதிகாரிகளின் பார்வை தமிழகத்தின் மீது விழுந்தது. அவர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்த ரகசிய தகவல்களை ஒன்று திரட்டி அதிரடி சோதனையில் ஈடுபட திட்டமிட்டனர். அந்த வகையில் நேற்று அதிகாலை மயிலாடுதுறையில் 15, சென்னையில் 5 இடங்கள் என தமிழகத்தில் சுமார் 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சென்னையில் சோதனை: சென்னை புரசைவாக்கம் அழகப்பா சாலையில் இயங்கி வரும் தனியார் ஆம்புலன்ஸ் சர்வீஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அங்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணி செய்துவரும் மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் பகுதியைச் சேர்ந்த அல்பாசித்(26) என்பவரை சுற்றி வளைத்தனர்.

பின்னர், தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு மற்றும் பிரச்சாரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தனியார் ஆம்புலன்ஸ் சர்வீஸ் நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக டிரைவராக பணியாற்றிக் கொண்டு இவர், சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வந்ததாக என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவர், பணி முடிந்து ஓய்வு நேரத்தில் சென்னையில் பெரியமேடு, மண்ணடி, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வந்ததாக அவருடன் ஒன்றாக பணி செய்யும் ஓட்டுநர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட அல்பாசித்தை, என்ஐஏ அதிகாரிகள் புரசைவாக்கத்தில் உள்ள அவர்களது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். யார் யாருக்கெல்லாம் இவருடன் தொடர்பு இருக்கிறது? ஐ.எஸ் அமைப்புக்கு ஆட்களை திரட்டினாரா? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை: சென்னை, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 15 வாகனங்களில் வந்த 30-க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள், மயிலாடுதுறையில் உள்ள திருமுல்லைவாசல் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த முகமது பைஜர் அலி, அமீர் பைசல், முகமது அமீர், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முகமது ஆசிக், அஸ்கர் அலி, பிரதான சாலையைச் சேர்ந்த முகமது அப்சர் அலி, முகமது வாசிம் அக்ரம், பாசித் ரஹ்மான், சொக்கலிங்கம் நகரைச் சேர்ந்த முகமது அல்பாசித், அண்ணாநகரைச் சேர்ந்த முகமது ஹரிஸ், அமீன் நகரைச் சேர்ந்த இஜாஸ் முகமது, சையது சகாபுதீன், பள்ளிவாசல் தெரு முகமது சஃபா, மேல நடுத்தெரு மகாதீர் முகமது, எல்லை இருப்புக் கட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முகமது நஃபின் ஆகிய 15 பேரின் வீடுகளில் நேற்று அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் உள்ளூர் போலீஸார் பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டனர். நண்பகல் 12 மணியளவில் சோதனை நிறைவடைந்த நிலையில், சோதனை செய்யப்பட்ட வீடுகளில் இருந்து செல்போன்களை எடுத்துச் சென்றனர். மேலும் 15 பேரையும் வரும் 31-ம் தேதி சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அளித்து சென்றனர்.

ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அல்பாசித் உடன் மேற்கண்ட 15 பேரும் வாட்ஸ்-அப் குழு மூலம் தொடர்பில் இருந்ததால், அவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அல்பாசித், ஐ.எஸ் அமைப்பின் தமிழ்நாடு பிரிவு தலைவர் போன்று செயல்பட்டுள்ளதாகவும், வாட்ஸ்-அப் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்ததாகவும் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. திருமுல்லைவாசல் பகுதியில் ஏற்கெனவே 2 முறை என்ஐஏ சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *