அரசியல் ஆலோசனை & தேர்தல் யுக்திகளை வகுக்கும் ‘ஐ-பேக்’ I-PAC நிறுவனத்தின் இயக்குநர் பிரதிக் ஜெயின். இவர் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவராகவும் இருக்கிறார். இந்த நிறுவனம் தான் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கிறது. இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி I-PAC நிறுவனத்தின் கொல்கத்தா அலுவலகம் மற்றும் அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

இந்த சோதனையின் மம்தா பானர்ஜி பிரதிக் ஜெயினின் வீட்டுக்குச் சென்று சில ஆவணங்களை கைப்பற்றியிருக்கிறார் என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மம்தா பானர்ஜி, ‘‘அமலாக்கத் துறையினரின் இந்த சோதனை நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது. அவர்கள் எங்கள் கட்சியின் ஆவணங்களையும் சட்டமன்றத் தேர்தலுக்கான எங்கள் வேட்பாளர்களைப் பற்றிய விவரங்களையும் கொண்ட ஹார்ட் டிஸ்குகளை பறிமுதல் செய்து கொண்டிருந்தனர்.
நான் அவற்றை அவர்களிடம் இருந்து மீட்டுக் கொண்டு வந்தேன். அரசியல் கட்சியின் தரவுகளைச் சேகரிப்பது அமலாக்கத்துறையின் கடமையா? இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. உள்துறை அமைச்சர் நாட்டை பாதுகாப்பவரைப் போல அல்லாமல், மிகவும் மோசமான அமைச்சரைப் போல நடந்து கொள்கிறார்’’ என கண்டனம் தெரிவித்திருந்தார்.