ஐ.பி.எல். கோப்பை இறுதிப்போட்டி நேற்று(26-ந்தேதி) சென்னையில் நடைபெற்றது. கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் ஆரம் பத்திலேயே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஹெட் டக் அவுட்
ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே அதிரடி வீரர் அபிஷேக்சர்மா 2 ரன்னில் ஆட்டம் இழந்தார். 2&வது ஓவரில் ஹெட் ரன் எதுவும் எடுக்காமல் சந்தித்த முதல் பந்திலேயே வைபவ் அரோரா பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதன் பின்னர் ஐதராபாத் அணியால் சரிவில் இருந்து மீளமுடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. பெரிதும் எதிர்பார்க்கப்ட்ட கிளாசன் 16 ரன்களில் ஹர்சித் ரானா பந்தில் போல்ட் ஆனார். அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்களும், மார்க்ரம் 20 ரன்களும் எடுத்தனர்.
113 ரன்கள்
ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கொல்கத்தா அணி சார்பில் பந்து வீசிய அனைவரும் விக்கெட் எடுத்தனர். ரஸ்சல் 3 விக்கெட்டும், ஸ்டார்க்,ஹர்சித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டும், வைபவ் அரோரா, நரைன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
கொல்கத்தா எளிதில் வெற்றி
இதன் பின்னர் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் கொல்கத்தா அணி 2&வது பேட்டிங் செய்தது. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் நரைன் 6 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் குர்பாஸ், வெங்டேஸ் ஐயர் ஆகியோர் அதிரடியாக ஆடினர். இதனால் கொல்கத்தா அணியின் ரன் வேகம் அதிகரித்தது. முடிவுல் கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து ஐ.பி.எல். கோப்பையை வென்றது.
வெங்கடேஷ் ஐயர் 26 பந்தில் 52 ரன்கள் குவித்தார். குர்பாஸ் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கேப்டன் ஷிரேயஸ் ஐயர் 6 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி 3&வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
3வது முறையாக கோப்பை
இதற்கு முன்பு கொல்கத்தா அணி 2012,2014&ம் ஆண்டில் கோப்பையை கைப்பற்றி இருந்தது. போட்டியை ரசித்து பார்த்த அந்த அணியின் உரிமையாளர் நடிகர் ஷாருக்கான் ரசிகர்களை பார்த்து உற்சாக மாக கையசைத்தார். மேலும் அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அதிரடிக்கு பஞ்சம் இல்லாமல் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்து வந்த ரசிகர்கள் ஆரம்பம் முதலே போட்டி எந்த வித பரபரப்பும் இல்லாமல் சென்றால் ஏமாற்றம் அடைந்தனர்.