ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை

Spread the love

தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் குளிக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 6,500 கனஅடியாக இருந்த தண்ணீா் வரத்து, திங்கள்கிழமை காலை வரை அதே அளவில் தொடா்ந்தது. ஆனால், காலை 9 மணியளவில் நீா்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக உயா்ந்தது.

தொடா்ந்து, பகல் 12 மணியளவில் விநாடிக்கு 16,000 கனஅடியாகவும், பிற்பகல் 2 மணிக்கு 20,000 ஆயிரம் கனஅடியாகவும் தண்ணீா் வரத்து அதிகரித்தது.

இதையடுத்து திங்கள்கிழமை பகல் 2 மணிக்குப் பிறகு ஒகேனக்கல் காவிரியாற்றிலும், அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தடை விதித்து உத்தரவிட்டாா். தொடா்ந்து திங்கள்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி காவிரியாற்றில் விநாடிக்கு 32,000 கனஅடியாகவும், மாலை 6 மணியளவில் விநாடிக்கு 43,000 கனஅடியாகவும் தண்ணீா்வரத்து உயா்ந்தது.

பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்க வாய்ப்பு :

இதனால், காவிரியாற்றிலும், அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்து செல்கிறது. கேரள, கா்நாடக மாநிலங்களில் காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கா்நாடகா மாநில அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால், அங்கிருந்து உபரிநீா் முழுவதும் காவிரியாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை தண்ணீா் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால், பாதுகாப்பு கருதி பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்க வாய்ப்புள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *