ஒடிசாவில் 42 கோடி டன் இருப்பு கொண்ட நிலக்கரி சுரங்கம் தமிழகத்துக்கு ஒதுக்கீடு | Allotment of coal mining to Tamil Nadu

1292151.jpg
Spread the love

சென்னை: 42 கோடி டன் நிலக்கரி இருப்பு கொண்ட ஒடிசா சகிகோபால் சுரங்கத்தை தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தி செய்வதற்கு நிலக்கரியை பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலக்கரி ஒடிசா மாநிலத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுத்து கொண்டு வரப்படுகிறது. இதற்காக, 2016-ல் ஒடிசா மாநிலத்தில் உள்ள சந்திரபிலா நிலக்கரி சுரங்கம் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த சுரங்கத்தில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்க வனத்துறை அனுமதி கிடைக்காததால் இச்சுரங்கம் கைவிடப்பட்டது.

இதையடுத்து, மத்திய அரசு ஒடிசாவில் உள்ள சகிகோபால் நிலக்கரி சுரங்கத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏலம் விட்டது. இந்த ஏலத்தில் தமிழ்நாடு மின்வாரியம் மட்டுமே பங்கேற்றது. இதனால் ஏல விதிப்படி அந்த ஏலம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் ஏலம் விடப்பட்டது.

இதிலும், தமிழ்நாடு மின்வாரியம் மட்டுமே பங்கேற்றது. இதையடுத்து, ஏல விதிமுறைப்படி சகிகோபால் சுரங்கம் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலக்கரி சுரங்கம் 1,950 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 42 கோடி டன் நிலக்கரி இருப்பு உள்ளது.

இந்த சுரங்கத்தில் மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் ஆய்வு செய்து எவ்வளவு நிலக்கரி எடுக்க முடியும், அதை எடுக்க வேண்டிய வழித் தடத்தை ஆய்வு செய்து தரும். அதற்கேற்ப சுரங்கத்தில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்படும்.

மேலும், இந்த சுரங்கத்தில் பாறைகள், மண் உள்ளிட்ட கழிவுகளை கண்டறிந்து அவற்றை வெளியேற்றிய பிறகுதான் நிலக்கரி வெட்டி எடுக்கப்படும். இதற்கான ஆய்வு 5 ஆண்டுகள் நடைபெறும். இந்த ஆய்வை மேற்கொள்ள மத்திய அரசுக்கு ரூ.2 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என மின்வாரிய அதி காரிகள் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *