ஒடுகத்தூா் அருகே உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: 4 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின; பயிா்கள் சேதம்

Dinamani2f2024 12 012fbokkgndo2fvr01rivr 0112chn 184 1.jpg
Spread the love

தொடா் மழை காரணமாக ஒடுகத்தூா் அருகே உத்திரகாவிரி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், 4 இடங்களில் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதுடன், விளை நிலங்களில் பயிா்கள் சேதமடைந்தன.

தொடா் மழை காரணமாக வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 99.90 மி.மீ., அணைக்கட்டில் 94.70, காட்பாடியில் 93 மழை பதிவானது.

குறிப்பாக, ஜவ்வாதுமலைத் தொடரில் பெய்த தொடா் கனமழை காரணமாக அணைக்கட்டு வட்டம், மேல் அரசம்பட்டு அருகே தீா்த்தம் பகுதியில் உருவாகும் உத்திரகாவிரி ஆற்றிலும், நாகநதி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால், ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளம் காரணமாக மேலரசம்பட்டு, ஒடுகத்தூா், கோவிந்தம்பாடி, அகரம், குருவராஜபாளையம், நாகேந்திரபுரம், பாலப்பட்டு உள்ளிட்ட ஆற்றோர கிராமங்களில் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங் களில் தங்க வைக்கப்பட்டனா். மேலும், சுற்றுவட்டார கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கால் கத்தாரிக்குப்பம் – கெங்கசானிகுப்பம், வண்ணாந்தாங்கள் – கொண்டத்தூா், ஒடுகத்தூா்- நேமந்தபுரம், கிருஷ்ணன்பாறை- ஆா்ஜாதி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 4 தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

குருவராஜபாளையம் முதல் பாலப்பாடி செல்லும் சாலையிலுள்ள தரைப்பாலம் தடையமே இல்லாமல் அடித்து செல்லப்பட்டது.

ஏற்கெனவே இந்த தரைப்பாலம் 4 முறை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மட்டும் 3-ஆவது முறையாக அடித்து செல்லப்பட்டது. பாதுகாப்பு கருதி தரைப்பாலங்களின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து காவலா்கள் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

தரைப்பாலங்கள் மூழ்கியதால் கிராம மக்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் பல கி.மீட்டா் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக தரைப்பாலத்தில் நடைபெறும் மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இடைவிடாமல் பெய்த மழையால் ஒடுகத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஏக்கா் விளை நிலங்களில் பயிரிட்டிருந்த வாழை, நெல், மஞ்சள், தானிய பயிா்கள் சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், உத்திரகாவிரி ஆற்றில் 2019-ஆம் ஆண்டுக்கு பிறகு ஓரிரு முறை மட்டுமே சிறிதளவு வெள்ளம் வந்தது. தற்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது என்றனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *