ஒன்றுக்கும் உதவாத அதிமுக உரிமை மீட்புக் குழு மா.செ கூட்டங்கள்: நவ.27-ல் ஓபிஎஸ் முடிவு என்ன? | What decision is OPS going to take was explained

1340233.jpg
Spread the love

எந்த நேரத்தில் அம்மா சமாதியில் தியான போராட்டம் நடத்தினாரோ தெரியவில்லை… அப்போதிருந்தே ஓபிஎஸ்ஸின் அரசியல் வாழ்க்கை ஒரே போராட்ட வாழ்க்கையாகிவிட்டது. ரெட்டை தலைமை இருக்கும் போதே அதிமுகவுக்குள் ஓபிஎஸ்ஸுக்கு ஒவ்வொரு நாளும் போராட்டமாகத்தான் இருந்தது.

ஆனாலும், வலிக்காதது மாதிரியே இருந்து நாட்களை நகர்த்தினார். ஒருகட்டத்தில் ரெட்டைத் தலைமை சகாப்தம் முடிந்து ஒற்றைத் தலைமையாக இபிஎஸ் உருவெடுத்தார். அத்தோடு ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டார். அதன் பிறகு சட்டப் போராட்டங்களை நடத்தினாலும் ஓபிஎஸ்ஸால் அதிமுக-வை சொந்தங்கொண்டாட முடியவில்லை.

இடைப்பட்ட காலத்தில் அதிமுக பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றத்தின் மூலம் தடையாணை பெற்றார் இபிஎஸ். இதனால், ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’ என்ற அமைப்பைப் தொடங்கினார் ஓபிஎஸ். அவர் தான் இப்போது இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர். இக்குழுவுக்கு மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகளையும் நியமித்துள்ளார். புதிய நிர்வாகிகளையும் தொடர்ந்து நியமித்தும் வருகிறார்.

தனது இருப்பைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக உரிமை மீட்புக்குழு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அடிக்கடி கூட்டி வருகிறார் ஓபிஎஸ். இந்தக் கூட்டங்களில் பிரயோஜனமாக எந்த முடிவும் எடுக்கப்படுவதில்லை என்கிறார்கள். பெரும்பாலும், “எடப்பாடி ஒரு துரோகி. தன்னை முதல்வராக்கிய சசிகலாவுக்கே துரோகம் செய்தார்.

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் பதவியை ஜெயலலிதாவுக்கு வழங்கிய நிலையில், அப்பொறுப்பில் அமர்ந்து, அரசியலில் அவரை அடையாளம் காட்டிய ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்தார். ஆட்சி நீடிக்க உதவிய ஓபிஎஸ்ஸுக்கும் துரோகம் செய்தார்” என தேய்ந்த ரெக்கார்டு கணக்காய் ஒரே பல்லவியையே பாடி வருவதாக உரிமை மீட்புக் குழுவினரே அலுப்புடன் சொல்கிறார்கள்.

ஒவ்வொரு கூட்டத்திலும், “கட்சி விதிப்படி தேர்தல் மூலம் அடிப்படை உறுப்பினர்களால் தான் பொதுச்செயலாளரை தேர்வுசெய்ய முடியும். இந்த சட்டவிதியை எப்போதும் மாற்றக்கூடாது. ஆனால், கட்சி விதிகளை மீறி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆகியுள்ளார்” என்பதையே பன்னீரும் திரும்பத் திரும்ப பேசி வருகிறார். ஆக, கூட்டம் கூடுவதும் தேநீர் அருந்தி கலைவதுமாகவே உள்ளது உரிமை மீட்புக்குழுவின் அரசியல் அஜெண்டா.

இந்​நிலை​யில், நவம்பர் 27-ல் உரிமை மீட்புக் குழு மாவட்டச் செயலா​ளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டி இருக்​கிறார் ஓபிஎஸ். இதிலாவது அதிமுக இணைப்பு தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது தான் எது நடந்தாலும் ஓபிஎஸ்ஸை கைவிடாமல் 3 ஆண்டுகளாக அவரைப் பின்தொடரும் ஆதரவாளர்​களின் எதிர்​பார்ப்பாக உள்ளது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “அதிமுக பழையபடி ஒன்றிணைந்தால் தான் கட்சிக்கு நல்லது. அந்த முடிவில் எங்களிடம் எந்த மாற்றமும் இல்லை. பழனிசாமி மட்டும் தான் இணைப்பை ஏற்க மறுக்கிறார். மற்ற அனைவரும் இணைப்பை விரும்புகின்றனர். 27-ம் தேதி நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அந்தக் கூட்டத்தில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து விரைவில் மாநில நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசிக்க இருக்கிறோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *