அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்தியத் திரைப்படமான ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ படத்தைத் தனது விருப்பப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஆண்டுதோறும் தனக்குப் பிடித்த பாடல்கள், புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களைப் பட்டியலிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்வார்.
இந்த ஆண்டும் அதுபோல தனக்குப் பிடித்தப் படங்களாக அவர் வெளியிட்டப் பட்டியலில் இந்தியத் திரைப்படமான ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ படத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த பாயல் கபாடியா இயக்கிய இந்தத் திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு, நவ. 22ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது.
இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம், ஹ்ருது ஹாரூன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | அல்லு அர்ஜுனுக்கு கை, கால், கிட்னி போய்விட்டதா?: ரேவந்த் ரெட்டி கடும் தாக்கு!
இந்தோ-பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பாக உருவான இப்படம் பிரான்ஸில் நடைபெற்ற 77-வது கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு உயரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதை ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ படம் வென்றது.
Here are a few movies I’d recommend checking out this year. pic.twitter.com/UtdKmsNUE8
— Barack Obama (@BarackObama) December 20, 2024
மேலும், சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் ஆகிய இரு பிரிவுகளில் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் செவிலியராகப் பணியாற்றும் கேரளத்தைச் சேர்ந்த பெண்களின் வாழ்க்கையைப் பேசும் இந்தப் படம் பெரியளவில் கவனம் பெற்றதைத் தொடர்ந்து அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் விருப்பப் பட்டியலிலும் இருப்பது இந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.