ஒப்புதல் மனை பிரிவுகளின் பொது ஒதுக்கீட்டு இடங்களின் பயன்பாட்டை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் | utilization of public allotment spaces in approved land units

1369044
Spread the love

சென்னை: ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள மனைப்பிரிவுகளில், பொது ஒதுக்கீடு இடங்கள் அதன் உபயோகங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய, நகர ஊரமைப்பு இயக்குநர் பா.கணேசன் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: விரிவான மனை அபிவிருத்தி திட்டங்கள் தயாரிக்கப்படும்போது, ஒப்புதல் அளிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் உள்ள பொது ஒதுக்கீடு இடங்கள், விரிவான அபிவிருத்தி திட்டங்களின் பொது ஒதுக்கீடாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பொது ஒதுக்கீடு இடங்கள், நகர ஊரமைப்பு சட்டத்தின்கீழ் கையகப்படுத்தப்படவில்லை என்று நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாவட்டநகர ஊரமைப்பு அலுவலகம் மூலம் அந்த இடங்கள் விடுவிக்கப்படுவது தெரியவருகிறது.

நீதிமன்ற உத்தரவு: இத்தகைய மனைப்பிரிவு பொது ஒதுக்கீடுகளுக்கு, தமிழ்நாடு நகர ஊரமைப்பு சட்டத்தின்கீழ் விடுவிப்பது பொருந்தாது. உச்சநீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றவழக்குகளில், ஒப்புதல் அளிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் பொது உபயோக ஒதுக்கீடுகளாக உத்தேசிக்கப்பட்டுள்ள இடங்களை அதன் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற வழக்குகள், நகராட்சி நிர்வாக இயக்குநர் சுற்றறிக்கை மற்றும் நகர ஊரமைப்பு இயக்குநர் சுற்றறிக்கை ஆகியவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள மனைப்பிரிவுகளில் பொது ஒதுக்கீடுகளாக உத்தேசிக்கப்பட்டுள்ள திருமண மண்டபம், சமுதாய நலக்கூடம், சிறுவர் பள்ளி போன்ற இடங்களை வேறு எவ்வித உபயோகத்துக்கும் மாற்ற அம்மனைப்பிரிவில் உள்ள பூங்கா, திறந்த இடம், சிறுவர் விளையாடுமிடம் போன்ற பொது ஒதுக்கீட்டு இடங்கள் 10 சதவீதம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதை, அசல் மனைப்பிரிவு வரைபடம், அசல் செயல்முறை ஆணை மற்றும் அசல் மனைப்பிரிவு நிபந்தனைகள் போன்ற உண்மையான உத்தரவுகளை கொண்டு உறுதி செய்ய வேண்டும்.

அதன்பின், இதர விற்பனைக்குரிய பொது ஒதுக்கீடுகளை வேறு உபயோகங்களுக்கு மாற்றம் செய்ய கோரும் விண்ணப்பங்களின் மீது ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *