சென்னை: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அமைச்சரவை அறிவித்துள்ள நிலையில், இத்திட்டத்தால், தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் 62,267 ஊழியர்கள் பயனடைவார்கள் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்அளித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கடந்த 24-ம் தேதிநடை பெற்ற கூட்டத்தில் மத்தியஅரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதில், புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு பதிலாக, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த ஓய்வூதியத் திட்டத்தில் ரயில்வே ஊழியர்கள் உள்பட 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.
இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இத்திட்டத்தில் தெற்கு ரயில்வேயில், 62,267 ஊழியர்கள் பயனடைவார்கள் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: தற்போது, தெற்கு ரயில்வேயில் மொத்தம் 81,311 ஊழியர்கள் உள்ளனர். இதில், 18,605 பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்திலும், 62,706 பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழும் உள்ளனர். இந்த ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கான விருப்பத்தை பயன்படுத்துவதற்கு தகுதி பெறுவர். இதன்மூலம் உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத்திலிருந்து பயனடைவார்கள்.
இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்தவருக்கு 25 ஆண்டு பணிசேவை முடிந்து, ஓய்வு பெறும்போது அவர்களுக்கு கடைசி12 மாத அடிப்படை சம்பளத்தின் சராசரியில், 50 சதவீதம் ஓய்வூதியமாகத் தரப்படும். இத்திட்டத்தில் உள்ளோர் ஓய்வுபெற்று காலமானால் அவர்களின் குடும்பத்தாருக்கு ஓய்வூதியத்தில், 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக தரப்படும்.
இத்திட்டத்தில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப டி.ஆர். தரப்படும். இத்திட்டத்தில் ஒருவர் 10 ஆண்டுகளில் ஓய்வுபெற்றால், அவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியமாகவும், டி.ஆர். ஆக ரூ.5,000 ஆகவும் சேர்த்து குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆக ரூ.15,000 கிடைக்கும். இதுதவிர, பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.