நேற்று நடந்த இதன் பிரஸ் மீட்டில் பங்கேற்ற யோகி பாபு, ”எனக்கு சுரேஷ் சங்கையாவை ‘காக்கா முட்டை’ படத்தில் இருந்தே தெரியும். ‘ஒரு கிடாயின் கருணை மனு’வில் என்னை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், அப்போது எனக்கு தயக்கமாக இருந்தது. முதன்மை பாத்திரம் இல்லை என்றாலும், வேறொரு கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். தேதிகள் சார்ந்த சிக்கல், மற்ற படங்களில் இருந்ததால் அதுவும் நடக்கவில்லை.
இதைத் தொடர்ந்து தான் சுரேஷ் சங்கையா என்னை ஹீரோவாக வைத்து படமெடுக்க வேண்டும் என்று இந்தப் படத்தை கொடுத்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக பார்க்கிறேன். இயக்குநர் இந்தப் படத்திற்காக நிறைய விஷயங்களை லைவாக செய்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.
படப்பிடிப்பில் ஷாட்டிற்கு இடையில் பத்து நிமிடங்களில் கதை சொல்லக்கூடியவர். அடுத்து இந்தப் படம் செய்வோம் என்று கூறுவார். நல்ல இயக்குநரை நாம் இழந்துவிட்டோம். ஆனால், அவர் எப்போதும் நம்முடனேயே தான் இருக்கிறார்.
குழந்தை பிறந்த பிறகு தான் அவர் உயிரிழந்தார். ஏற்கனவே நான் கூறியதை போல், அந்த குழந்தையின் படிப்புக்கு நான் உதவுகிறேன். மேடை ஏறி சாமி இல்லை என்று கூறுவதை விட மலையேறி சாமி கும்பிடுகிறேன். நான் வணங்கும் முருகனை நம்பி இந்தப் படம் வெற்றி பெற வேண்டுகிறேன், நன்றி” என்ற யோகி பாபு விழா மேடையிலேயே அந்த குழந்தையின் படிப்பு செலவுக்கு காசோலை வழங்கினார்.
இது குறித்து சுரேஷ் சங்கையாவின் மனைவி தனிஷ் பாத்திமாவிடம் பேசினோம்.

“நேத்து படத்தோட ட்ரெயிலர் வெளியீடு நடந்தது. டைரக்டருக்கு பதிலாக என்னை கலந்துக்க சொல்லியிருந்தாங்க. நானும் வந்திருந்தேன். அங்கே யோகி பாபு சார், ‘சின்னதா ஒரு உதவி’னு சொல்லி செக் போட்டு கொடுத்தாங்க. இதை நான் கொஞ்சமும் எதிர்பாக்கல.
‘தொகை எவ்வளவுனு வெளியே சொல்ல வேணாம்மா’னு மட்டும் கேட்டுக்கிட்டார். போன வருஷம் நடந்த சுரேஷின் நினைவேந்தல் நிகழ்ச்சியின் போது, என் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு யோகி பாபு சார் உதவுவதாக சொல்லியிருந்தாங்க. அதை இந்த நிகழ்ச்சியில் செய்திருக்காங்க. அதன்பின் யோகிபாபு சார்கிட்ட பேச முடியல. தயாரிப்பாளர் ரமேஷ்பாபு சார் ‘படத்தின் பிரஸ் ஷோவின் போது வருவார். அப்போது பேசிக்கொள்ளலாம்’ என்றார்.
யோகிபாபு சார் எனக்கு உதவி செய்வார்னு நினைக்கல. திடீர்னு கூப்பிட்டு செக் போட்டு கொடுத்துட்டார். யாராக இருந்தாலும் உதவி செய்யணும்னு அவர் நினைச்சதுக்கும், இந்த உதவி செய்ததற்கும் சேர்த்து நன்றி சொல்லிக்கிறேன். ” என நெகிழ்ந்து சொன்னார் தனிஷ்.