கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவால் இன்று காலமாகி இருக்கிறார்.
அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து மறைந்த மூத்த தலைவர் நல்லகண்ணு குறித்து பேசியிருக்கிறார்.
“மாபெரும் தலைவரை, மகத்தான மனிதரை இந்த நாடு இழந்திருக்கிறது. இந்த நாடு அடிமைப்பட்டு இருக்கும்போது விடுதலைக்காகப் போராடிய வீர இளைஞர்களில் ஒருவர்.
எண்ணற்ற அடக்குமுறை, ஒடுக்குமுறை என எல்லாவற்றையும் கடந்து துளியும் தன்னலம் இல்லாமல் இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் அரும்பாடுபட்டவர். எங்களுடைய தலைமுறையினருடனும் போராட்டங்களில் பங்குபெற்ற பெருந்தகை.
எவராலும் குறை சொல்ல முடியாத ஒரு புனிதர். நம்மோடு அவர் இல்லை என்று நினைக்கும்போது மிகுந்த மன வலியாக இருக்கிறது. அவருடன் நெருங்கிப் பழகிய பல நினைவுகள் எங்களுக்கு இருக்கின்றன.