குஜராத் மாநிலத்தில் முதியோர்களிடம் ராஜஸ்தானை சேர்ந்த ஒரு கும்பல் நூதன முறையில் மோசடி செய்துள்ளது. முதியோர்களுக்கு அதிக அளவில் மூட்டு வலி இருக்கும். இதனால் அவர்களால் அதிகமாக வெளியில் செல்ல முடியாது. மூட்டு வலிக்கு எவ்வளவோ சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் அதிகமானோர் சிரமப்படுகின்றனர்.
இதனை பயன்படுத்திக்கொண்ட ஒரு கும்பல் முதியோர்களுக்கு சிறப்பு பிசியோதெரபி கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளது. அகமதாபாத்தில் 85 வயது முதியவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
அவருக்கு கடுமையான மூட்டு வலி இருந்ததால் அவரால் பெரிய அளவில் வெளியில் செல்ல முடியவில்லை. அவரது மூன்று மகன்களும் அரசு வேலையில் இருக்கின்றனர். 85 வயது முதியவர் மூட்டு வலிக்காக மருத்துவமனைக்கு சென்று வந்ததை ஒரு கும்பல் கண்காணித்து அவரது மூட்டு வலியை குணப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
அக்கும்பலை சேர்ந்தவர்கள், மூட்டு வலியை குணப்படுத்த தங்களால் முடியும் என்றும், பலருக்கு இது போன்று மூட்டு வலியை குணப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரபல டாக்டர் திவான் என்பவரது பெயரை சொல்லி அவர் மூலம் சிகிச்சை கொடுப்பதாகவும் கூறினர். முதியவர்களை நம்ப வைக்க தங்களது கூட்டத்தை சேர்ந்த ஒருவர் மூலம் முதியவரிடம் போன் மூலம் பேச வைப்பது வழக்கம். போனில் பேசும் நபர் வேறு மருத்துமனையில் ரூ. 15 லட்சம் செலவு செய்து தனது தாயாருக்கு சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை என்றும், ஆனால் டாக்டர் திவான் மூலம் குணமடைந்ததாக கூறுவார். அவர்களின் பேச்சை நம்பி அவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொள்வதாக முதியவர் தெரிவித்தவுடன் அவர்களது வீட்டிற்கு அக்கும்பல் செல்வது வழக்கம்.
போலி டாக்டரும் அவரது உதவியாளர் தன்ராஜ் பாட்டீல் என்பவரும் சேர்ந்து ஒரு போலியான சிகிச்சையை செய்வார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டவரின் உடலில் ஊசிகளைச் செருகி கை சாமர்த்தியம் மூலம் கருப்பு இரத்தம் கட்டிகளை எடுப்பார்கள். அந்த கருப்பு ரத்த கட்டிகள்தான் அவர்களின் நோய்க்குக் காரணம் என்றும், கருப்பு ரத்தத்தின் ஒவ்வொரு துளியை எடுக்க 7,000 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் கூறினார்கள். முதல் நாளில் 85 வயது முதியவரிடமிருந்து 4 லட்சத்தை வாங்கிக்கொண்டனர்.