தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை ஆரம்பித்த விஜயகாந்த், அ.தி.மு.கவுடன் ஒருமுறை கூட்டணி அமைத்தார். அதன் பிறகு அந்தக் கட்சியின் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி 2016-ம் ஆண்டு தேர்தலைச் சந்தித்து. பின்னர் பா.ஜ.க, அ.தி.மு.க என கூட்டணிகளை மாற்றினாலும் தே.மு.தி.க இதுவரை தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கவில்லை.
இந்தச் சூழலில்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க-வைக் கொண்டுவந்து, அந்தக் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கொடுக்க கடுமையாக முயற்சிகள் நடந்தன. இரட்டை இலக்க தொகுதிக்கு வாய்ப்பு இல்லை என்றால், பத்து சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் தேர்தலுக்குப் பின்பு கொடுப்பதாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்பட்டது.
அதேபோல் தி.மு.க தரப்புடனும் தே.மு.தி.க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தி.மு.க தரப்பில் ஒற்றை இலக்க தொகுதியும், ராஜ்ய சபா சீட்டும் தருவதாகச் சொல்லி உறுதி கொடுத்தனர். ஆனால் பா.ஜ.க தரப்பு எப்படியும் தே.மு.தி.க-வை தங்கள் அணிக்குள் கொண்டுவர கடுமையாக முயற்சி எடுத்த நிலையில்தான், யாரும் எதிர்பார்க்கா வண்ணம் இன்று காலை அறிவாலயத்தில் முதல்வரைச் சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளார் பிரேமலதா.
இது குறித்து தே.மு. தி.க தரப்பில் கேட்டபோது, “இரண்டு தரப்பிலும் ஒரு ராஜ்ய சபா சீட் தர முன்வந்தனர். ஆனால் அ.தி.மு.க தரப்பில் அடுத்த ஆண்டு தான் ராஜ்ய சபா இடத்தை ஒதுக்க முடியும் என்று சொல்லியதால், அங்கிருந்து பின்வாங்கலாம் என்கிற யோசனையில் தலைமை இருந்தது. தே.மு.தி.க தரப்பில் வரும் மார்ச் மாதத்தில் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க-விற்கு ஒரு சீட் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்தப் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடைபெற்று வந்த வேளையில், வரும் மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற உள்ள பரப்புரை பொதுக் கூட்டத்தில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை மேடையேற்றவும், அதற்கான அழைப்பிதழை வரும் 23ஆம் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க தலைவர்கள் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்துக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் அ.தி.மு.க முகாம் மூலம் செய்யப்பட்டது.