'ஒரே ஒரு தொகுதியிலாவது தனிச்சின்னம்…' – கூடிப் பேசி முடிவெடுத்த வைகோ? – ஏற்குமா அறிவாலயம்?

Spread the love

திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென ஒரு அவசர உயர்நிலைக் குழுவை கூட்டி கூட்டணி விவகாரங்கள் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை செய்திருக்கிறார். ஆலோசனையின் முடிவில் தொகுதிப் பங்கீடு சார்ந்து ஒரு முக்கிய முடிவை வைகோ எடுத்திருப்பதாக தாயகத்தினர் கிசுகிசுக்கின்றனர்.

துரை வைகோ
துரை வைகோ

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பற்றி பேச மதிமுக அவைத் தலைவர் அர்ஜூன ராஜ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி அறிவாலயத்தில் கூடி பேசியது.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அர்ஜூனராஜ், ‘ஒரு ராஜ்யசபா சீட் கேட்டிருக்கிறோம். தனிச்சின்னத்தில் போட்டியிட முடிவு செய்திருக்கிறோம்’ என்றார். ஆனால், மதிமுகவின் கோரிக்கைகளை திமுக ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. குறிப்பாக, மதிமுக கடந்த தேர்தலைப் போல இந்த முறையும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டுமென திமுக விரும்புவதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 28 ஆம் தேதி வைகோவே அறிவாலயத்தில் முதல்வரை சந்தித்து தங்களின் கோரிக்கைகள் குறித்து பேசியிருந்தார். அதன் பிறகும் இருதரப்புக்கும் உடன்பாடு எட்டப்படவில்லை.

உயர்நிலைக் குழு
உயர்நிலைக் குழு

இந்நிலையில்தான், இன்று மதிமுகவின் தலைமை அலுவலகமான தாயகத்தில் உயர்நிலை குழு கூட்டத்தை வைகோ நடத்தியிருந்தார். இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடந்த அந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறுகின்றனர் மதிமுகவினர்.

கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என விசாரித்தோம். ‘திமுக நாங்கள் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. அதேமாதிரி, எண்ணிக்கையிலும் கறார் காட்டுகிறார்கள். இது கொள்கைப் பிடிப்போடு அமைந்திருக்கும் கூட்டணி அதனால் எண்ணிக்கையில் கூட சமரசம் செய்யலாம். ஆனால், தொடர்ந்து அடுத்தடுத்த சட்டமன்றத் தேர்தல்களில் சொந்த சின்னத்தில் நிற்காமல் போவது கட்சியை மேலும் பலவீனமடையச் செய்யும். இருக்கிற நிர்வாகிகளும் தொண்டர்களுமே சோர்வாகிவிடுவார்கள். அதனால் திமுக ஒதுக்குகிற சீட்களில் ஒரே ஒரு சீட்டில் மட்டுமாவது தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். அதைத்தான் கூட்டத்திலும் பேசி முடித்திருக்கிறோம்’ என்றனர்.

ஒரே ஒரு சீட்டிலாவது தனிச்சின்னத்தில் நிற்க வேண்டும் என்கிற மதிமுகவினரின் கோரிக்கையை அறிவாலயம் ஏற்றுக்கொள்ளுமா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *