அதிர்ஷ்டம் எப்போது கதவைத் தட்டும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த அதிர்ஷ்டம் தன் கதவைத் தட்டும் வரை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொறுமையாகக் காத்திருந்த ஒரு 69 வயதுப் பெண்ணின் கதை இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த இந்தப் பெண், பல ஆண்டுகளாக ஒரே எண்களைக் கொண்டு லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். இறுதியில், அவரது அந்த அசாத்தியமான நம்பிக்கை அவருக்கு சுமார் 11.4 கோடி ரூபாய் (1.2 மில்லியன் டாலர்) பரிசைப் பெற்றுத் தந்துள்ளது.

இந்த “லோட்டோ 47′ (Lotto 47) லாட்டரி குலுக்கலில் அவர் பயன்படுத்திய எண்கள் 02, 16, 18, 19, 26 மற்றும் 42. குலுக்கல் முடிவுகள் வெளியானபோது, தான் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த அதே எண்கள் திரையில் தோன்றுவதைக் கண்டு அவர் திகைத்துப் போனார். “நான் வழக்கமாகப் பயன்படுத்தும் எண்கள் இவை என்பதால், பார்த்த உடனே எனக்கு அடையாளம் தெரிந்துவிட்டது. உடனே என் கணவரை எழுப்பி, நாம் லாட்டரி வென்றுவிட்டோம் என்று நினைக்கிறேன் என்று கூறினேன்,” என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சுமார் 10 மில்லியனில் ஒருவருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பரிசுத் தொகை தனது குடும்பத்தின் நிதி நிலையை முழுமையாக மாற்றப்போவதாக அவர் கூறுகிறார். குறிப்பாக, தனது கணவர் இனி பணி ஓய்வு பெற்று நிம்மதியாக ஓய்வெடுக்க இந்தப் பணம் உதவும் என்றும், மீதமுள்ள காலத்தை இருவரும் மகிழ்ச்சியாகக் கழிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.