வேலூர்: “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது எல்லாம் எந்தக் காலத்திலும் நடக்காது. ” என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூரில் ரூ.1.20 கோடி மதிப்பில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.
கேள்வி: ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் தந்தை கருணாநிதி வழியை முதலமைச்சர் பின்பற்றவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளாரே? அதற்கான பதில் என்ன?
துரைமுருகன்: மத்திய அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் சிறு பிள்ளைத்தனமாக பேசலாமா? ஒரு மத்திய அமைச்சர் இப்படியா பேசுவது?
கேள்வி: தமிழகத்துக்கு பிரதமர் மோடி வருகிறார் என்பதற்காக பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கப்பட்டதா?
துரைமுருகன்: மோடிக்காக கோடி கொடுத்தார்கள் என்கிறீர்களா…? எதற்காக இருக்கும் என நீங்களே சொல்லுங்கள்.
கேள்வி: 2029 ஆண்டு முதல் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த பணிகள் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளாரே அது குறித்து உங்களது கருத்து என்ன?
துரைமுருகன்: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது எல்லாம் எந்தக் காலத்திலும் நடக்காது. ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே சாமியார், ஒரே சாப்பாடு.. இதெல்லாம் இங்கு நடக்காது.” இவ்வாறு அவர் தனக்கு உரிய பாணியில் பதில் அளித்தார்.