இதுபற்றி இண்டிகோ நிறுவனம் தனது அறிக்கை ஒன்றில், “கடந்த இரண்டு நாள்களாக இண்டிகோவின் செயல்பாடுகள் மற்றும் நெட்வொர்க் முழுவதும் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு எங்கள் வாடிக்கையாளர்களிடம் நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
சிறிய தொழில்நுட்பக் கோளாறுகள், குளிர்காலத்துடன் தொடர்புடைய அட்டவணை மாற்றங்கள், பாதகமான வானிலை, திருத்தப்பட்ட விமான கடமை நேர வரம்பு விதிமுறைகளைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல எதிர்பாராத செயல்பாட்டுச் சவால்கள், எங்கள் செயல்பாடுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின.

இடையூறுகளைக் கட்டுப்படுத்தவும், நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் தொடங்கியுள்ளோம். இந்த நடவடிக்கைகள் அடுத்த 48 மணிநேரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
அதோடு, எங்கள் செயல்பாடுகளை இயல்பாக்கவும், நெட்வொர்க் முழுவதும் எங்கள் நேரத்தை படிப்படியாக மீட்டெடுக்கவும் இந்த நடவடிக்கை அனுமதிக்கும்.
வாடிக்கையாளர்களின் அசௌகரியத்தைக் குறைக்கவும், செயல்பாடுகள் விரைவாக நிலைபெறுவதை உறுதி செய்யவும் எங்கள் குழுக்கள் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றன.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் இடங்களை அடைய அல்லது பணத்தைத் திரும்பப் பெற மாற்று பயண ஏற்பாடுகள் வழங்கப்படுகின்றன. விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன், வாடிக்கையாளர்கள் https://www.goindigo.in/check-flight-status.html வலைதளப் பக்கத்தில் சமீபத்திய விமான நிலையைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
இண்டிகோ நிறுவனம் இப்படியொரு அறிக்கை வெளியிட்டிருந்தாலும், இதனால் சிரமம் எதிர்கொண்ட விமான பயணிகள் பலரும் சமூக வலைதளங்களில் இண்டிகோ நிறுவனத்தின் சேவை குறித்து கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டு வருகின்றனர்.