ஏர் இந்தியாவின் ஒரு பிரிவான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்சை டாடா குழுமம் கடந்த 2021 ம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது. நிறுவனத்தின் தரப்பில் வேலை நிமித்தமாக கொண்டுவரப்பட்ட புதிய விதிமுறை மாற்றங்கள் ஊழியர்களிடையே கடும அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது.
300 ஊழியர்கள் விடுமுறை
இந்தநிலையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஒரே நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்து விடுப்பு எடுத்தனர். இதனால் ஏர்இண்டியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடு என 86 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உடல்நிலை சரியில்லை என கூறி 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விடுப்பு எடுத்ததால் அந்த நிறுவன அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
செல்போன் சுவிட்ச் ஆப்
விடுப்பில் உள்ள ஊழியர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது அவர்கள் அனைவரது செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டு உள்ளது. ஊழியர்கள் திட்ட மிட்ட இந்த விடுமுறையை எடுத்து விமான நிறுவனத்தை நிலைகுலைய வைத்து உள்ளனர்.
இதுகுதொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, விடுப்பு எடுத்து உள்ள ஊழியர்களை தொடர்பு கொள்ள ஏர் இண்டியா நிறுவனம் முயற்சித்து வருகிறது.
கடைசி நேரத்தில் எங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் (கேபின் க்ரூ) உடல்நிலையை காரணம் காட்டி விடுப்பு எடுத்து உள்ளனர். நேற்று இரவு முதல் இதை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம். இதன் காரணமாக விமான பயணம் தாமதமாகி உள்ளது மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து அறிந்து கொள்ள ஊழியர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம்.
வருத்தம் தெரிவிக்கிறோம்
எங்கள் பயணிகள் எதிர்கொள்ளும் சிக்கலை விரைந்து தீர்வு காண முயற்சித்து வருகிறோம். இந்த இடையூறுக்காக நாங்கள் பயணிகளிடம் வருத்தம் தெரிவிக்கிறோம். பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தொகையை முழுவதும் திரும்ப வழங்குவது அல்லது வேறொரு நாளைக்கு பயண திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
ஊழியர்களுடன் வாக்குவாதம்
இதற்கிடையே சென்னை, மதுரை, கொச்சி, கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானம் பல ரத்து செய்யப்பட்டும், போதுமான ஊழியர்கள் இல்லாததால் தாமதாகவும் இயக்கப்பட்டு வருகிறன்றன. இதனால் அனைத்து விமான நிலையங்களிலும் முன்பதிவு செய்து இருந்த பயணிகள் விமானநிறுவன ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம்செய்து வருகிறார்கள்.
மதுரை விமான நிலையத்தில் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்துசெய்யப்பட்டதால் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்தனர். அவர்கள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.