ஒரே விழாவில் 34 புது இயக்குநர்கள்; ஒளிப்பதிவாளர் செழியனின் புதுமுயற்சி; பங்கேற்கும் பிரபலங்கள்!

Spread the love

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியனின் ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ திரைப்படப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் 34 பேர், 34 சுயாதீனத் திரைப்படங்களை இயக்குகிறார்கள். 34 அறிமுக இயக்குநர்களின் விழா சென்னையில் வருகிற 24ம் பிரசாத் லேப் தியேட்டரில் தேதி நடக்கிறது.

புதிய இயக்குநர்கள் அறிமுக விழா
புதிய இயக்குநர்கள் அறிமுக விழா

‘கல்லூரி’, ‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘பரதேசி’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் செழியன். கவனம் ஈர்த்த ‘டூ லெட்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் பாராட்டுகளைக் குவித்தவர். அவரது திரைப்படப் பள்ளி மாணவர்கள் 34 பேர் 34 சுயாதீன திரைப்படங்களை இயக்க உள்ளனர்.

34 திரைப்படங்கள் குறித்தான இயக்குநர்களின் அறிமுக விழா வருகிற 24ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விழாவில் ஒளிப்பதிவாளர்கள் பி. சி. ஸ்ரீராம், ரவிவர்மன், எடிட்டர்கள் பி. லெனின், ஶ்ரீகர் பிரசாத், எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியின் தலைவர் டிராட்ஸ்கி மருது எனப் பலரும் கலந்துகொண்டு வாழ்த்திப் பேச உள்ளனர். இந்த விழா குறித்து செழியனிடம் பேசினோம்.

டூ லெட் படத்தில்..
டூ லெட் படத்தில்..

”வெளிநாடுகள்ல குறிப்பாக பிரான்ஸில் New Wave Cinemaனு ஒரு புது அலை உருவாச்சு. அதாவது அவங்க வழக்கமாக கமர்ஷியல் சினிமாக்கள் எடுத்துக்கிட்டு இருக்கும்போது, சாமான்ய மக்களுக்கும் ஒரு கதை இருக்குது. அதையும் சொல்லணும்னு நினைச்சாங்க.

அதை நண்பர்கள் பலரும் கூட்டமாகச் சேர்ந்து தயாரிச்சாங்க. அவங்களோட இண்டிபென்டன்ட் சினிமா அங்கே மட்டுமல்ல உலகம் முழுவதும் ஒரு புது அலையாக உருவாச்சு. நம்ம ஊர்லேயும் டிஜிட்டல் வந்த பிறகு பலரும் இப்படி படங்கள் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதன் பின் முறையாகக் கற்று, எப்படி அணுகணும்னு தெரிந்த பிறகு படமா பண்றாங்க.

நான் திரைப்படப் பள்ளி தொடங்கினதே எதேச்சையாக நடந்த ஒரு விஷயம். என்கிட்ட பலரும் குறைந்த செலவில் இண்டிபென்டன்ட் சினிமா எப்படி எடுக்கணும்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. ஒரு கட்டத்துல வெளிநாடுகள்ல இருந்தும் போன் பண்ணி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.

அதன் பிறகே ஃபிலிம் ஸ்கூலை ஆரம்பிச்சேன். 80 பேர்கள், ஐந்து பேட்ச் எடுத்தேன். அதுல 34 பேர் முழு நீள திரைப்படத்தை இயக்குவதற்கு ரெடியாகிட்டாங்க. எல்லாமே சிறு பட்ஜெட் படங்கள். அவங்களுக்குள்ளாகவே நிதியைத் திரட்டி நண்பர்கள் சேர்ந்து எடுக்கிறாங்க.

புதிய இயக்குநர்கள் அறிமுக விழா
புதிய இயக்குநர்கள் அறிமுக விழா

சனி, ஞாயிறுகள்லதான் வகுப்புகள் நடைபெறும். வெளிநாடுகள்ல இருந்தும், பணிபுரிவோரும் படிக்கிறதாலா ஆன் லைனிலும் வகுப்புகள் எடுத்தேன். படிக்கும் போதே, சீன்கள் எழுதி, அதை நடைமுறை பயிற்சியாகவும் ஷூட் செய்து பழகினாங்க.

இன்னொரு விஷயம், இங்கே சொல்றதுக்கு கதைகள் இருக்கு. சினிமா எடுக்கணும்ங்கற விருப்பமும் எல்லார்கிட்டேயும் இருக்குது. நம்ம கையிலேயே குவாலிட்டியான காமிராக்கள் இருக்கு. அதனால சினிமா எடுக்கிறது எளிதாகிடுச்சு.

ஓடிடியில் வெளியாகக்கூடிய தரத்தில் எடுக்கக்கூடிய அளவுல குறைந்த செலவிலான காமிராக்களும் கிடைக்குது. எல்லார்க்கிட்டேயும் கதைகள் இருக்குது. அந்தக் கதைகளை சினிமாவாக மாற்ற அடிப்படையான விஷயங்களைக் கத்துக்கிட்டு பண்ணினால் மதிப்பு கூடும். இப்படி படங்களுக்கு உலகம் முழுக்கவே பெரிய வரவேற்பு இருக்குது.

இந்தப் படங்கள் திரை விழாக்களில் கவனம் பெறும்போது, தியேட்டர்கள், ஓடிடி வெளியீடுகள் கிடைக்கறது எளிதாகிடும். வெளியிடக்கூடிய தளங்களும் தாராளமாக இருக்கு. 34 இயக்குநர்களின் பட போஸ்ட்களும் துவக்க விழாவில் அறிமுகப்படுத்த உள்ளோம்.

‘வழித்துணை, சுழற்சி, மத்தி, உறுதுணை, அடவி, ‘கிடை’, ‘சேவ் த கேட்’, ‘மயில’, ‘செல்போன்’, ‘அருகன்’, ‘கிடை’, ‘லகடு’, ‘ரைடர்’, ‘குடை வள்ளல்’, ‘மியாவ்’, ‘நேற்றைய நிலா’, ‘தணல்’, ‘வார் கிட்ஸ்’ ‘தாழ்’, ‘கூடு’, ‘பசி’, ‘தீவிரவாதி’, ‘கண்ணாயிரம்’, ஓட்டம்’, ‘தம்மம் பழகு’, ‘மோகன மதில்’, நிசப்தம்’, ‘கடைசி எல்லை’, ‘மௌனி’, ‘தாழ்’ எனப் படங்களின் டைட்டில்கள், கதைகள் கவனம் பெறும். இந்த முயற்சியை பி.சி.ச்ரிராம் சார், பி.லெனின் சார்னு பலரும் ஊக்குவிச்சிருக்காங்க” என்கிறார் செழியன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *