அவரது இந்தத் தன்னலமற்ற மாபெரும் சேவையைப் பாராட்டி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) அவருக்கு `இந்தியாவின் வனமகன்’ (Forest Man of India) என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.
இந்திய அரசாங்கம் 2015-ம் ஆண்டு, நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான `பத்மஸ்ரீ’ விருதை அவருக்கு வழங்கி கௌரவித்தது. அவரது நினைவாக அந்தக் காடு அதிகாரபூர்வமாக மொலாய் காடு (Molai Forest) என்று அழைக்கப்படுகிறது.
உலகமே கொண்டாடும் ஒரு சாதனையாளராக இருந்தும், ஜாதவ் பயேங் இன்றும் மிக மிக எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்துவருகிறார். அவருக்கு பினிதா என்ற மனைவியும், ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
காட்டிற்குள்ளேயே ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வந்த அவர், 2012-ல் குடும்பத்தினரின் வசதிக்காக அருகிலுள்ள கிராமத்திற்குக் குடிபெயர்ந்தார். இருந்தாலும், தினமும் அதிகாலையில் எழுந்து தனது காட்டிற்குச் சென்று மரங்களைப் பராமரிப்பதைக் கடமையாகக் கொண்டுள்ளார்.
பசுக்கள் மற்றும் எருமைகளை வளர்த்து, அதன் மூலம் கிடைக்கும் பாலை விற்பனை செய்து வரும் வருமானத்தில்தான் அவரது ஒட்டுமொத்த குடும்பமும் இன்றும் வாழ்ந்துவருகிறது.