பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னா் ரயில்வே கட்டமைப்பைக் குறிவைத்து பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதலால் ரயில் போக்குவரத்து முடங்கியது.
இதனால், ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், பிரான்ஸின் பிற பகுதிகளில் இருந்தும் போட்டி நடைபெறும் தலைநகா் பாரீஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ரயில்கள் மூலம் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரயில்வே கட்டமைப்புகளைக் குறிவைத்து வியாழக்கிழமை நள்ளிரவில் தீவைப்பு, பொருள்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் பல பகுதிகளில் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டுள்ளது. ரயில் போக்குரவத்துக்கு மிகவும் முக்கியமான கண்ணாடி இழை (ஃபைபா் ஆப்டிக்ஸ்) கம்பிகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன.
இதன் விளைவாக ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்களது பயண திட்டங்களை ஒத்திவைக்குமாறு பயணிகளை ரயில்வே நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், ஏற்கெனவே இதே போன்ற தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற தீவிர இடதுசாரி அமைப்புகள் இந்தத் தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என்று உளவுத் தகவல்களை மேற்கோள் காட்டி உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஒலிம்பிக் போட்டிக்கும் இந்தத் தாக்குதலுக்கும் தொடா்பு இருப்பதற்கான நேரடி ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை.
வடக்கே லீல், மேற்கே போா்டோ, கிழக்கே ஸ்ட்ராஸ்பா்க் ஆகிய நகரங்களுடன் பாரீஸ் நகரை இணைக்கும் ரயில் வழித்தடங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும், பாரீஸையும் மாா்சீல் நகரையும் இணைக்கும் வழித்தடத்தில் தீவைப்புத் தாக்குதல் நடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.
இந்தத் தாக்குதல் குறித்து அரசின் சட்ட அமலாக்கத் துறையினா் விசாரணை தொடங்கியுள்ளனா். தாக்குதலில் ஈடுபட்டவா்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கையை புலனாய்வு மற்றும் பிற துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் தொடங்கியுள்ளனா்.
தேசிய நலன்களுக்கு ஊறுவிளைக்கும் வகையில் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவா்களுக்கு 10 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
இந்த சதித் தாக்குதல் காரணமாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரா்கள் உள்பட 8 லட்சத்துகக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.