பாரிஸ் நகரில் வரும் 26 ஆம் தேதி தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகளில் மிகவும் ஆபத்தான இடத்தில் நடைபெறவிருக்கிறது அலைச்சறுக்குப் போட்டிகள்.
ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு விளையாட்டுகளுடன் சாகச விளையாட்டான அலைச்சறுக்குப் போட்டியும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு அலைச்சறுக்கு போட்டி நடத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மிகவும் ஆபத்தானதாகக் கூறப்படுகிறது.
பிரெஞ்ச் பாலினேசியாவில் இருக்கிறது தஹிதி தீவுகள். போட்டிக்காக உலகின் மிகச் சிறந்த அலைச்சறுக்கு வீரர்கள் அனைவரும் இம்மாத இறுதியில் இங்கேதான் செல்லவுள்ளனர். தங்கப் பதக்கத்தை வெல்வதற்காக உலகின் ஆபத்தான அலைகள் எழக் கூடிய இடமான டீஹுபோவில் (Teahupo’o) உயிரைப் பணயம் வைக்க அலைச்சறுக்கு வீரர்கள் பலரும் தயாராகி வருகின்றனர்.
சாதாரணமாக இங்கு அலைச்சறுக்கில் ஈடுபடுவது மிகவும் கடினம் என்பதுதான் இங்குள்ள அலைகளின் தனித்தன்மையும் ஆபத்தும். இங்கு அலைச்சறுக்கில் ஈடுபடுபவர்களில் குறைந்தது ஒருவராவது உயிரிழந்துவிடக் கூடும் என்பதாகப் பரவலாக கூறப்படுகிறது.
டீஹுபோ ( Teahupo’o)
பிரெஞ்ச் பாலினேசியாவின் தஹிதி தீவின் தென்மேற்கு பகுதியில் டீஹுபோ என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடம் அலைச்சறுக்கு வீரர்கள் அனைவராலும் “ த எண்ட் ஆஃப் தி ரோட்” என்பதாக அறியப்படுகிறது. அந்த இடத்துக்கு இவ்வாறு பெயர் உருவாக இயற்கையான காரணமும் மற்ற காரணங்களும் உள்ளன. டீஹுபோ அலைகள் தீவின் எல்லையில் சாலைகள் முடிவடையும் இடத்தில் எழுவதால் இப்பெயர் பெற்றது. ஆனால், அலைச்சறுக்கு மேற்கொள்வதற்கு மிகவும் கடினமான அலைகளாக இருப்பதும் இப்பெயர் பெற்றதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
டீஹுபோ அலையின் பண்புகள்
இயற்கையின் அதிசயங்களில் ஒன்றாக டீஹுபோ அலைகள் கருதப்படுகின்றன. தெற்கு பெருங்கடலின் இந்த ஆபத்தான அலைகள் பொதுவாக 6 முதல் 10 அடி உயரம் வரை எழும் தன்மை கொண்டவை. சில நேரங்களில் 20 அடிக்கு மேலாகவும் இங்கு அலைகள் எழும். இங்கு அலைச்சறுக்கு வீரர்கள் அலைச்சறுக்கு மேற்கொள்ளும் தூரம் 200 முதல் 300 அடி வரை மட்டுமே இருக்கும். ஆனால், இங்கு எழும் அலைகளின் தன்மை மிகுந்த ஆபத்தானதாக இருக்கும். இங்கு அலைச்சறுக்கு மேற்கொள்ளும்போது உயிரிழப்பு நேரிடும் ஆபத்து அதிகம் எனக் கூறப்படுவதற்கு இந்த அலைகளின் தன்மையும் முக்கிய காரணம். அனுபவமிக்க அலைச்சறுக்கு வீரர்களும்கூட இங்கே மிக எச்சரிக்கையுடன் அலைச்சறுக்கில் ஈடுபடுவார்கள் எனக் கூறப்படுகிறது.
ஒலிம்பிக்கில் அலைச்சறுக்கு போட்டிக்கு மதிப்பெண் கொடுக்கப்படுவது எப்படி?
அலைச்சறுக்கு வீரர்கள் ஓவ்வொரு முறை அலைச்சறுக்கு மேற்கொள்ளும்போதும் நடுவர்கள் குழு அவர்களுக்கு 1-லிருந்து 10-க்குள் மதிப்பெண் வழங்கும். அலைச்சறுக்கில் அவர்களது வேகம், பயணிக்கும் விதம், கடினத்தன்மை ஆகியவை மதிப்பெண் வழங்கும்போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். ஒவ்வொரு முறை அலைச்சறுக்கு மேற்கொள்ளும்போதும், வீரர்களின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு பின்பு சராசரி மதிப்பெண் வழங்கப்படுகிறது.
இவர்களில் பெறும் கூடுதல் மதிப்பெண்களைப் பொருத்துப் பதக்கங்கள் வழங்கப்படும்.