முகலாய மன்னரான ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ. 21 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்து அமைப்பு அறிவித்துள்ளது.
கல்லறையை அகற்றுவதற்கு ஆதரவாக மகாராஷ்டிர முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னவீஸ் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்து அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கிருஷ்ண ஜென்மபூமி சங்கர்ஷ் நியாஸ் அமைப்பின் தலைவரான தினேஷ் ஃபல்ஹரி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது,
”முகலாய மன்னரான ஒளரங்கசீப் இந்து கோயில்களை இடித்துள்ளார். இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களை கொடுமைப்படுத்த அனுமதித்துள்ளார். மராத்திய போர் வீரர்கள் மீது அநாகரிக செயல்களை கட்டவிழ்த்துள்ளார். சமீபத்தில் படத்தில் இவற்றைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரின் கல்லறை இந்தியாவில் என்ன காரணத்துக்காக இருக்கிறது? அவரின் கல்லறை இங்கிருந்து அகற்றப்பட வேண்டும். இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் அவரின் கல்லறை இருக்கக் கூடாது. ஒளரங்கசீப் கல்லறையை இடித்து அகற்றுபவர்களுக்கு கிருஷ்ண ஜென்மபூமி சங்கர்ஷ் நியாஸ் சார்பில் ரூ. 21 லட்சம் பரிசாக வழங்கப்படும். அவரின் கல்லறையை நாட்டில் வேறு எங்கும் வைக்க நாங்கள் அனுமதிக்கமாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒளரங்கசீப் கல்லறை விவகாரம்
ஒளரங்கசீப் ஒரு சிறந்த நிர்வாகி என்றும், பல கோயில்களை அவர் கட்டியுள்ளதாகவும், வரலாற்றில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் சமாஜவாதி கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் அபு ஆஸ்மி தெரிவித்த கருத்துக்கு மகாராஷ்டிரத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தது. அபு ஆஸ்மிக்கு எதிராக காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டன.
இதன் விளைவாக ஒளரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்தது. குறிப்பாக, ஒளரங்கசீப் கல்லறையை அகற்றவில்லை என்றால் பாபர் மசூதிக்கு நேர்ந்த நிலை ஏற்படும் என்று இந்து அமைப்பினர் மிரட்டல் விடுத்தது பெரும் சர்ச்சையானது.
ஒளரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி, விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய நாக்பூரில் ஏற்பட்ட போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித நூல் எரிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதனால் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியதால், ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கல் வீச்சில் பலர் படுகாயம் அடைந்தனர்.
போராட்டம் வெடித்த பகுதிகளில் பதற்றத்தை தணிக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஒளரங்கசீப் விவகாரம்: நாக்பூரில் வன்முறை! 9 பேர் படுகாயம்; 15 பேர் கைது!