ஓசூர்: ஓசூர் மாநகரப் பகுதியில் சாலையோரங்களில் யாசகம் பெறும் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய தொழில் நகரமான ஓசூரில் 3,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணி செய்து வருகின்றனர். இதில் குறிப்பாக வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து ஓசூரில் உள்ள தொழிற்சாலைகள், விவசாய பணிகள் மற்றும் பல்வேறு கைத்தொழில் செய்து வருகின்றனர்.
இதில் நலிவடைந்த வடமாநில தொழிலாளர்கள் ஓசூர் ரயில் நிலையம் அருகே குடிசை அமைத்து தங்கி பல்வேறு பணிகள் செய்து வருகின்றனர். இவர்களின் 5 வயது முதல் 10 வயது குழந்தைகள் கிழிந்த ஆடைகளுடன் ஓசூரில் உள்ள முக்கிய சாலைகளில் கை ஏந்தி யாசகம் பெறும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் இக்குழந்தைகளை மீட்டு அவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “ஓசூரில் வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பல்வேறு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்களில் மிகவும் நலிவடைந்த தொழிலாளர்களின் குழந்தைகள் போதிய பராமரிப்பின்றி, பள்ளிக்குச் செல்லாமல் கிழிந்த ஆடைகளுடன் சாலைகளில் சுற்றிதிரிந்து பொதுமக்களிடம் யாசகம் பெறுகின்றனர். இதனால் இக்குழந்தைகளின் எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது. மேலும் இதில் சில குழந்தைகள் திருட்டு சம்பவத்திலும் ஈடுப்படுகின்றனர்.
இது போன்ற செயல்களில் ஈடுப்படும் குழந்தைகள் வரும் காலங்களில் பெரிய குற்றசம்பவங்களில் ஈடுப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஏற்கெனவே ஓசூர் மாநகராட்சி பள்ளிகளில் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர். இதேபோல் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தைகளை மீட்டு மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என கூறுகின்றனர்.
இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சரவணன் கூறும் போது, “குழந்தைகளை வைத்து யாசகம் பெறுவதும் மற்றும் குழந்தைகள் யாசகம் பெறுவதை தடுக்கவும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். இதுபோன்ற குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்து விடுவோம். அவர்கள் குழந்தைகள் நல நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று அங்கு விசாரணை செய்வார்கள். குழந்தைகளுக்கு பெற்றோர் இருந்தால் அவர்களுக்கு விழிப்புணர்வு செய்து அவர்களின் சொந்த மாநிலத்தில் உள்ள குழந்தைகள் நலகுழுவிடம் ஒப்படைத்து விடுவார்கள்.
அதேபோல் பெற்றோர் இல்லாத குழந்தைகளிடம் விசாரணை செய்து, குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்தால் அவர்கள் பள்ளியில் சேர்த்து விடுவார்கள். ஓசூரில் பல ஆண்டுகளாக நிரந்தரமாக பணி செய்து வரும் வடமாநில குழந்தைகள் இருந்தால் அவர்களை இங்குள்ள பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் ஆய்வு செய்து யாசகம் பெறும் குழந்தைகளை மீட்போம்,” என்று அவர் கூறினார்.