நாட்றம்பள்ளி அருகே ஓடும் பேருந்தின் முன் சக்கரம் கழன்ற நிலையில், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் தனியார் பேருந்து முன் சக்கரம் கழன்றதை அறிந்து ஓட்டுநர் பேருந்தை ஓரம் கட்டியதால் எவ்வித அசம்பாவிதமும் இன்றி 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி 40 பயணிகளுடன் தனியார் பேருந்து சென்றுக் கொண்டிருந்துள்ளது.
அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு என்ற இடத்தில் பேருந்தின் முன் சக்கரம் அலைவதுபோல தெரிந்துள்ளது.
இதனை அறிந்து சுதாரித்துக் கொண்ட பேருந்து ஓட்டுநர் அரவிந்தன் (49) உடனடியாக பேருந்தை ஓரங்கட்டி பார்த்தபோது, முன் சக்கரத்தின் போல்டுகள் ஒவ்வொன்றாக கழன்று, கடைசியில் இரண்டு போல்டில் சக்கரம் இயங்கியுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக முன் சக்கரத்தை கழற்றி தயார் நிலையில் வைத்திருந்த போல்டுகளை பொருத்தி பேருந்தை இயக்கி சென்றுள்ளார்.
தனியார் பேருந்து மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் நிலையில் ஓடுபாதையில் சக்கரம் கழன்று இருந்தால் 40 பயணிகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் அதனை முன்கூட்டியே அறிந்து பேருந்தின் முன் சக்கரத்தை கழட்டி மாட்டியதால் 40 பயணிகள் அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினர்.