சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் ஒருவர், கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு பேருந்தில் செல்வது வழக்கம். 26-ம் தேதி மதியம் கல்லூரி முடிந்து பேருந்தில் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தார். பல்லவன் சாலை பேருந்து நிறுத்தத்தில் ஏறிய ஒருவர், மாணவியின் அருகில் இருக்கையில் அமர்ந்தார். பின்னர் பேருந்து புறப்பட்ட சில நிமிடத்திலேயே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.
அதை மாணவி கண்டித்தார். அதோடு மாணவி அந்த இருக்கையிலிருந்து எழுந்து வேறு இடத்துக்குச் செல்ல முயன்றார். ஆனால் அந்த நபரோ மாணவியின் கையைப் பிடித்து இழுத்து மீண்டும் பக்கத்திலேயே அமர வைத்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, சத்தம் போட்டிருக்கிறார். அதைக்கேட்ட சக பயணிகளும் கண்டக்டர், மாணவியிடம் என்னவென்று விசாரித்திருக்கிறார்கள்.
உடனே மாணவி தனக்கு நடந்த கொடுமைகளை கூற, அருகில் இருந்த நபரோ தகாத வார்த்தைகளால் பேசி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து பேருந்தை டிரைவர், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நிறுத்தினார். பின்னர், சக பயணிகளின் உதவியோடு பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை மாணவி, போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
பின்னர் மாணவி, தரப்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்க, பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் ராமு (38) என்றும் மண்ணடி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து ராமு மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை கைது செய்தனர். விசாரணைக்குப்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸார் கூறுகையில், “ஓடும் பேருந்தில் தகாத முறையில் நடக்க முயன்ற இளைஞருடன் துணிச்சலுடன் போராடியதோடு அவரை எங்களிடம் ஒப்படைத்தார் அந்த மாணவி. இதைப் போல ஒவ்வொருவரும் செயல்பட்டால் இதுபோன்ற சம்பவங்கள் குறையும்” என்றனர்.