கொடைக்கானல்: ஓணம் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு கேரளா சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில சுற்றுலா பயணிகளும் அதிகம் வருகை தருகின்றனர். கேரளாவில் தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கேரள மாநில சுற்றுலா பயணிகள் நேற்று கொடைக்கானலுக்கு அதிக எண்ணிக்கையில் வருகை தந்திருந்தனர்.
சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன்பாரஸ்ட், குணாகுகை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, ஏரிச்சாலைகளில் சுற்றுலா பயணிகள் அதிகம் காணப்பட்டனர். ஏரிச்சாலையில் குதிரை சவாரி செய்தும், சைக்கிள் ஓட்டியும் மகிழ்ந்தனர். நட்சத்திர வடிவ ஏரியில் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.
சுற்றுலாத் தலங்களில் மேகக் கூட்டங்கள் இறங்கிவந்து சுற்றுலா பயணிகளை தழுவிச் சென்றதால் மகிழ்ந்தனர். வட்டக்கானல், பாம்பார் அருவில தேவதை நீர்வீழ்ச்சிகளில் கொட்டும் நீரை கண்டு ரசித்தனர். தென்மேற்கு பருவமழை சராசரியைவிட அதிகம் பெய்த நிலையில், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், இதமான தட்பவெப்பநிலை நிலவுகிறது.
கொடைக்கானலில் அதிகபட்சமாக பகலில் 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் இரவில் 13 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் காணப்படுகிறது. காற்றில் ஈரப்பதம் 65 சதவீதம் இருப்பதால் இரவில் லேசான குளிர் நிலவுகிறது. அடுத்த மாதம் துவக்கம் முதல் வடகிழக்கு பருவமழை கனமழையாக பெய்யும் என எதிர்பாக்கப்படும் நிலையில், அடுத்த மாதம் முதல் சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்புள்ளது.