ஓபிஎஸ், குடும்ப உறுப்பினர்கள் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு | high Court orders retrial of case against OPS and family members

1332649.jpg
Spread the love

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2001-2006 அதிமுக ஆட்சிகாலத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி சிவகங்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிரான இந்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனக் கூறி வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சிவகங்கை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் வகையில் உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், “முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை திரும்பப் பெற அனுமதித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது சகோதரர் ஒருவர் இறந்து விட்டதால் அவர்களுக்கு எதிரான வழக்கு கைவிடப்படுகிறது. மற்றவர்களுக்கு எதிரான வழக்கை மதுரை எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு சிவகங்கை நீதிமன்றம் வரும் நவ.27-ம் தேதிக்குள் மாற்ற வேண்டும். அதன்பிறகு மதுரை சிறப்பு நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி, அவர்கள் ஆஜராகும்போது பிணைப்பத்திரம் பெற்று ஜாமீன் வழங்கலாம்.

ஒருவேளை வழக்கை இழுத்தடிக்க முயற்சித்தால் ஜாமீனை ரத்து செய்யலாம். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல் விசாரணை அறிக்கையை துணை அறிக்கையாக எடுத்துக் கொண்டு மதுரை சிறப்பு நீதிமன்றம் வழக்கை தினந்தோறும் என்ற அடிப்படையில் வரும் 2025 ஜூன் 31-ம் தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். அதுதொடர்பாக உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *