ஓசூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டி.டி.வி.தினகரன் பாஜக கூட்டணியில் இணைந்ததை கடுமையாக விமர்சித்து பேசிய புகழேந்தி, தான் தவெக-வுக்கு செல்ல உள்ள தகவலை சூசகமாகத் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசும்போது, “திமுக-வுக்கும் தவெக-வுக்கும்தான் போட்டி, அதிமுக இல்லவே இல்லை. எடப்பாடி பழனிசாமி சொல்வதையெல்லாம் நம்பாதீர்கள். அவர் சோர்வடைந்துவிட்டார், பாஜக-வை விட்டு ஓபிஎஸ் வெளியே வர மாட்டார், எம்.ஜி.ஆர் ஆரம்பித்து ஜெயலலிதா தலைமை தாங்கிய கட்சி பாஜக-தான் என்பதுபோல் அவர் இருக்கிறார்.
ஓ.பி.எஸ் ஆகட்டும், கட்சியை அடமானம் வைத்த இ.பி.எஸ் ஆகட்டும், இதோ திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைக்கப் போகிறேன் என்று வந்த இன்னொரு அம்மாவாகட்டும், பெங்களூரு சிறை, திகார் சிறை வரைக்கும் கூடவே பயணித்து என்னால் இன்று அரசியல் வானில் பறந்துகொண்டிருக்கும் ஒருவர்(தினகரன்) இன்று எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்துவிட்டார்.
சசிகலா சிறைக்கு சென்றபோது ஒப்படைத்துவிட்டு சென்ற ஆட்சி ஆதிகாரம், கட்சி அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி பிடுங்கிக் கொண்டபோது அதை காப்பாற்றிக் கொள்ள திறமை இல்லாதவர், இப்போது அவருடனே இணைந்துவிட்டார்.

இந்த நான்கு பேருமே பாஜக-வின் அடிமைகள், பாஜக-வும் இவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இவர்கள் பணத்தை காப்பாற்றிக் கொள்ள பாஜக காலில் விழுந்துவிட்டார்கள். இதை பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றவர், “இன்னும் 10 நாள்களில் என் அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை யார் கொண்டாடுகிறார்களோ அவர்களை நான் கொண்டாடுவேன்” என்று சூசகமாகத் தெரிவித்தார்.
அவர் மட்டுமன்றி, அதிமுக-வில் அதிருப்தியில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து தவெக-வுக்கு அழைத்துச் செல்ல உள்ளதாகச் சொல்லப்படுகிறது.