”ஓபிஎஸ் வாங்கிய பட்டுபுடவைக்கு பணம் தரணும்; ஸ்டாலின் மீட்டுத் தருவாரா?” – பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

Spread the love

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்தவர் சிங்.செல்வராஜ்(65) அ.தி.மு.க நகரச் செயலாளரான இவர், திருபுவனம் பேரூராட்சி கவுன்சிலராகவும் இருக்கிறார்.

சோழன் பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அதிமுகவில் முதலமைச்சர், அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்த ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது அரசியல் வட்டத்தில் பெரும் பேசு பொருளானது. இந்நிலையில், சிங்.செல்வராஜ் கும்பகோணம் பகுதிகளில் ஓபிஎஸ் குறித்த போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார்.

ஓபிஎஸ் குறித்து போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி சிங்.செல்வராஜ்

“முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் என்னிடம் வாங்கிய கடனை இன்னாள் முதல்வர் மீட்டு தருவாரா? 2020ம் ஆண்டு ரூ.3 லட்சம் மதிப்புள்ள பட்டு சேலைகளில் இருமுகங்களின் படங்களை போட்டு என்னிடம் வாங்கினார். ஆனால் இதுவரையிலும் பணம் தராத துரோகி ஓ.பி.எஸ்ஸிடம் இருந்து பணத்தை வாங்கி கொடுங்கள்” என்ற வாசகம் அந்த போஸ்டரில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து செல்வராஜ் கூறுகையில், “திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்கம், பட்டு புடவை உற்பத்தியில் சிறந்த வடிவமைப்புக்காக ஜனாதிபதி விருது பெற்றது. இதற்காக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் இருவரையும் சந்தித்து பட்டுப்புடவை நினைவு பரிசாக வழங்கினோம்.

போஸ்டர்

இதையடுத்து கோவைக்கு வந்த பிரதமர் மோடிக்கு பட்டுப் புடவையை நினைவு பரிசாக கொடுக்கணும் என பணம் தருவதாக கூறி பிரதமர் மோடி உருவம் பொறித்த பட்டுப்புடவை கேட்டு ஓ.பி.எஸ் ஆர்டர் கொடுத்தார். நானும் தயாரித்து கோவை எடுத்து சென்றேன். அப்போது, நாங்கள் மேடைக்கு செல்ல முடியவில்லை. பின்னர் ஓ.பி.எஸ் பட்டுப்புடவையை வாங்கிச் சென்று மோடியிடம் பரிசாக வழங்கினார். இதற்கான பணத்தை பலமுறை கேட்டும் ஓ.பி.எஸ் தரவில்லை. தற்போது அவர் தி.மு.க-வுக்கு சென்று விட்டார். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வாங்கிய கடனை அவரிடமிருந்து இன்னாள் முதல்வர் ஸ்டாலின் பெற்று தர வேண்டும் என்று போஸ்டர் ஒட்டியுள்ளேன்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *