ஓய்வுபெற்ற முப்படையினரின் குடும்பத்துக்கு 48 மணி நேரத்தில் ஓய்வூதியம்: சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் தகவல் | Pension in 48 hours to family of retired tri-servicemen

1339724.jpg
Spread the love

தஞ்சாவூர்: ஓய்வுபெற்ற முப்படையினரின் குடும்பத்துக்கு, விண்ணப்பித்த 48 மணி நேரத்தில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் `ஸ்பர்ஸ்’ திட்டத்தின் கீழ், முப்படை (ராணுவம், கடற்படை, விமானப்படை) ஓய்வூதியதாரர்களுக்கு வருடாந்திர உயிர்ச்சான்று அடையாளம் காணவும், ஓய்வூதியர்களின் குறைகளைத் தீர்க்கவும் நேற்று சிறப்புமுகாம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கலந்துகொண்டார். சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் தலைமை வகித்து பேசியதாவது: முப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்தால், உடனடியாக அதைப் பரிசீலனை செய்து, 48 மணி நேரத்தில் ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஓடிபி எண் கொடுக்க வேண்டாம்: டிஜிட்டல் மூலம் ஓய்வூதியம் பெற்றுத் தருகிறோம் என்று கூறியும், செல்போன் ஓடிபி எண் தாருங்கள் எனக் கேட்டும் ஓய்வூதியர்களை சிலர் மோசடி செய்து வருகின்றனர். எனவே, யாருக்கும் ஓடிபி எண் கொடுக்க வேண்டாம். சென்னையில் உள்ள அலுவலகத்தில் நேரில் வந்து மட்டுமே ஓடிபி எண் வழங்க வேண்டும். தமிழகத்தில் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான எந்தக் கோரிக்கை மனுக்களும் தற்போது நிலுவையில் இல்லை. இதுபோன்ற குறைதீர் முகாம்கள், தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

ஓய்வூதியம் பெறுபவர்கள் இறந்துவிட்டால், அவர்களது உறவினர்கள் இறப்புச் சான்றிதழைப் பெற்று எங்களுக்கு செல்போனில் அனுப்பி வைத்தால், நாங்கள் அவர்களது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, குடும்ப ஓய்வூதியத்தை வழங்கி வருகிறோம்.தமிழகத்தில் 2.10 லட்சம் ஓய்வூதியர்களும், தஞ்சாவூரில் 6 ஆயிரம் ஓய்வூதியர்களும் உள்ளனர். இவர்களில் 60 ஆயிரம் பேர் குடும்ப ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்களுக்கான குறைதீர் சேவை மையம் விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது.

இதில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என எந்த மொழியில் பேசி குறைகளைக் கூறினாலும், உரிய தீர்வு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முகாமுக்கான ஏற்பாடுகளை, சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், தக்ஷின் பாரத் ராணுவ தலைமை அலுவலகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நலச் சங்கம் ஆகியவை இணைந்து செய்திருந்தன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *