கோவை மாவட்டத்தின் கிணத்துக்கடவு தொகுதியில், கடந்த இரண்டு தேர்தல்களாக நூலிழையில்தான் வெற்றிவாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறது தி.மு.க.
வரும் தேர்தலில் அந்தத் தொகுதியை அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க எதிர்பார்ப்பதால், “தொகுதியை தட்டித் தூக்குவதற்கு இதுதான் நேரம். சரியாக பணியாற்றினால் வெற்றிப் பெற்றுவிடலாம்’ என்று கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறாராம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி.
இதனால் பிரகாசமான வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக அது மாறியிருப்பதை உணர்ந்துவிட்டனர் உடன்பிறப்புகள். சிட்டிங் மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் மா.செ மருதமலை சேனாதிபதி, முன்னாள் எம்.பி சண்முகசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ பனப்பட்டி தினகரன், குறிச்சி பிரபாகரன், ஏர்போர்ட் ராஜேந்திரன் என்று ஏராளமானோர் கிணத்துக்கிடவு சீட்டுக்கு முட்டி மோதுவதால், அதிரி புதிரி ஆகியிருக்கிறது கோவை தி.மு.க.

‘வெற்றி பெற்றால் அமைச்சராகிவிடலாம்’ என்பதால், 50 ஸ்வீட் பாக்ஸ் வரையில் இறக்குவதற்கும் பலருமே தயாராக இருக்கிறார்களாம். இந்த போட்டியாளர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, தனக்கு அடக்கமான நிர்வாகி ஒருவருக்கு சீட் வாங்கித் தர செந்தில் பாலாஜி தரப்பு மேலிடத்தில் பேசுவதால், கோவையில் அனல் வீசுகிறது.