‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை: ‘ஓடிபி’ தடையை விலக்க கோரிய மனு இன்று விசாரணை | oraniyil tamil nadu otp issue Hearing today

1370414
Spread the love

மதுரை/சென்னை: திமுகவினர் நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின் போது, ‘ஓடிபி’ (ஒன் டைம் பாஸ்வேர்டு) எண் பெற விதிக்கப்பட்ட தடையை விலக்கக் கோரி, திமுக சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் டி.அதிகரையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின்போது ஓடிபி எண் பெற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த தடையை விலக்கக் கோரி, மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி ‘ஓரணியில் தமிழ்நாடு’ பொறுப்பாளர் வினோத், உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார். அதில், ‘‘திமுக நடத்திவரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையில் வாக்காளர்களின் ஆதார் எண் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படவில்லை.

போலி வாக்காளர் சேர்ப்பை தவிர்க்கவும், வாக்காளரின் செல்போன் எண்ணை உறுதிப்படுத்தவும் ஓடிபி எண் அனுப்பப்படுகிறது. இந்த ஓடிபியும் திமுக தளத்துக்குள் நுழைவதற்கு மட்டுமே பயன்படுத்தப் படுகிறது. மனுதாரர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர். திமுக மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எந்த ஆதாரமும் இல்லாமல் அரசியல் காரணங்களுக்காக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இதற்கு தனி செயலி பயன்படுத்தப்படுகிறது. அதில் வாக்காளர்கள் அவர்களாக அளிக்கும் தகவல்களை தவிர வேறு எந்த விவரங்களும் பெறப்படுவ தில்லை. யாரிடமும் தனிப்பட்ட விவரங்களை ஒருபோதும் கோருவதில்லை.

இதை ஏற்பவர்களுக்கு மட்டுமே ஓடிபி அனுப்பப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் தரவு அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் தனியுரிமை மீறல் மற்றும் தரவு மீறல் இல்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ஓடிபி எண் பெறுவதற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

ஆர்.எஸ்.பாரதி அறிக்கை: இதற்கிடையே திமுக நிர்வாகிகளுக்கு அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் கூறிவிட்டது. மேலும் ‘ஓடிபி’ மட்டும் கேட்காமல் உறுப்பினர் சேர்க்கையை மேற் கொள்ள அனுமதித்துள்ளது.

அதன்படி ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலியை அனைவரும் ‘அப்டேட்’ செய்ய வேண்டும். ‘ஓடிபி’ கேட்கும் முறை தற்போது இல்லை. செல்போன் எண் கட்டாயம். தற்போது ஒரு குடும்பத்துக்கு ஒரு போன் எண்ணில் 1:4 என்ற அடிப்படையில் உறுப்பினர்களைச் சேர்க்கலாம். வாய்ப்பு இருக்கும் இடங்களில் கிடைக்கும் அனைத்து செல்போன் எண்களையும் பெற்றுக் கொள்ளவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *