மதுரை: திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முகாமில் ஓடிபி எண் பெற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவினர் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை தெரிவித்து தடையாணை பெற்றதாக நீதிபதிகளிடம் திமுக புகார் தெரிவித்துள்ளது. இதையடுத்து தடையை விலக்க கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்ய திமுகவுக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.
தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் பொது மக்களிடம் ஓடிபி எண் பெற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நேற்று தடை விதித்தது.
இந்த நிலையில், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் ஓரணியில் தமிழ்நாடு நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு முன்பு அஜரானார்.
அப்போது அவர் நீதிபதிகளிடம், “பொதுமக்களிடம் திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முகாமில் ஆதார் விவரங்கள் எதையும் வாங்கவில்லை. அதிமுக தரப்பில் ஆதார் எண்ணை பயன்படுத்தி ஓடிபி பெறுவதாக தவறான தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்து இடைக்கால உத்தரவு பெற்றுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையிலேயே உறுப்பினர்களை சேர்க்கிறோம். உறுப்பினர் சேர்க்கை சம்மதம் பெறுவதற்காகவே ஓடிபி பெறப்பட்டது. வேறு எந்த ஆவணத்தையும் யாரிடமும் வாங்கவில்லை. தவறான தகவலை அளித்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
உயர் நீதிமன்ற தடையால் தற்போது உறுப்பினர் சேர்க்கை பணி மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே திமுக கோரிக்கையை அவசர வழக்காக விசாரித்து இடைக்கால தடையை விலக்க வேண்டும்,” என்றார். அதற்கு நீதிபதிகள், திமுக கோரிக்கை தொடர்பாக இடையீட்டு மனு தாக்கல் செய்யவும், நாளைக்கு விசாரணைக்கு எடுக்கிறோம் எனத் தெரிவித்தனர்.