பஞ்சாப் – ஹரியாணா எல்லையில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் கூடாரங்களை காவல் துறையினர் ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து அகற்றினர்.
ஓராண்டுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை அப்பகுதியில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றினர்.
அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஆயிரக்கணக்கான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஷம்பு பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் உள்பட பல்வேறு விவசாய அமைப்புகளின் தலைவர்களையும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளையும் காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட விவசாயிகள் பஹதுர்கர் காமாண்டோ காவல் துறை பயிற்சி மையத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விவசாய விளை பொருட்களுக்கானக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணைய சட்டம் குறித்து 3-வது கட்ட பேச்சுவார்த்தை சண்டிகரில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய அரசின் சார்பில், விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ்சிங் செளஹான், வணிகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல், உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் உயரதிகாரிகள் மற்றும் பஞ்சாப் மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.
விவசாயிகள் சார்பில் சம்யுத் கிஸான் மோர்ச்சா என்பிசார்பில் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித்சிங் தல்லேவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் வேளையில், மறுபுறம் போராட்டக்களத்தில் உள்ள விவசாயிகளின் கூடாரங்களை அகற்றி அவர்களை வலுக்கட்டாயமாக பஞ்சாப் காவல் துறை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | இந்திய ரயில்கள் மீதான 7,971 கல்வீச்சு சம்பவங்களில் 4,549 பேர் கைது: மத்திய அரசு!