ஓர் இடத்துக்கு 4 மாணவர்கள் போட்டி: எம்பிபிஎஸ், பிடிஎஸ்  கலந்தாய்வு புதன்கிழமை ஆன்லைனில் தொடக்கம் | 4 students compete for one seat: MBBS, BDS counselling starts online on Wednesday

1298130.jpg
Spread the love

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை (ஆக.21) ஆன்லைனில் தொடங்குகிறது. சிறப்பு பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 22-ம் தேதி நேரடியாக சென்னையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. ஒரு இடத்துக்கு 4 மாணவர்கள் போட்டியிடுகின்றனர்.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை கே.கே.நகர் இஸ்ஐ மருத்துவக் கல்லூரி, 22 தனியார் மருத்துவக் கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. அரசு கல்லூரிகளில் மீதமுள்ள 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 6,630 எம்பிபிஎஸ் இடங்கள், 1,683 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 496 எம்பிபிஎஸ் இடங்கள், 126 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இவைதவிர தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,719 எம்பிபிஎஸ் இடங்கள், 430 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது நிறைவடைந்து, விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 28,819 பேரும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு 3,683 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,417 பேரும் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு https://tnmedicalselection.net/ என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் ஆகஸ்ட் 21-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் காலை 10 மணி முதல் வரும் 27-ம் தேதி மாலை 5 மணி வரை ஆனலைனில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களை தேர்வு செய்யலாம். வரும் 28-ம் தேதி தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

தற்காலிக இடஒதுக்கீடு விவரங்கள் 29-ம் தேதியும், இறுதி இடஒதுக்கீடு விவரங்கள் 30-ம் தேதியும் இணையதளத்தில் வெளியிடப்படும். 30-ம் தேதி முதல் செப்டம்பர் 5-ம் தேதி நண்பகல் 12 மணி வரை இட ஒதுகீட்டு ஆணையை இணையதளத்தில் இருந்து இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். செப்டம்பர் 5-ம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும். மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 22-ம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேரடியாக நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் காலை 8 மணிக்கு விளையாட்டு வீரர்கள், 8.30 மணிக்கு முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, 9 மணிக்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. நீட் ஹால் டிக்கெட், மதிப்பெண் கார்டு, 10, 11, 12-ம் வகுப்பு மதிப்பென் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு சுகாதாரத்துறை இணையதளங்களை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 10,462 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ள நிலையில் தரவரிசைப் பட்டியலில் 42,236 மாணவ, மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். இதன் மூலம் ஒரு இடத்துக்கு 4 பேர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *