புதுதில்லி: இன்றைய வர்த்தகத்தில் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டியானது 5 சதவிகிதம் சரிந்தது வர்த்தகமானது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதிலிருந்து இது நாள் வரையான அதன் விலை உயர்வுக்குப் பிறகு இன்று முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தனர்.
மும்பை பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்கு 4.96 சதவிகிதம் சரிந்து ரூ.131.30 ஆக முடிவடைந்த நிலையில் தேசிய பங்குச் சந்தையில் 4.71 சதவிகிதமாக சரிந்து ரூ.131.55 என்று முடிவடைந்துள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் பங்குகள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அறிமுகமானதிலிருந்து என்.எஸ்.இ.யில் 10.72 கோடி பங்குகள் வர்த்தகமாகி உள்ள நிலையில், இன்றைய இன்ட்ராடே அமர்வில், ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டியின் பங்கு 8 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்து ரூ.125.96 மற்றும் ரூ.126.05-ஐ எட்டியது.
பட்டியலிடப்பட்டதிலிருந்து உயர்ந்து வந்துள்ள இந்த பங்கு, ஆகஸ்ட் 20 ம் தேதியன்று 107 சதவிகிதம் உயர்ந்து ரூ.157.5-ஐ எட்டியது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிகர இழப்பு முதல் காலாண்டில் ரூ.267 கோடியிலிருந்து ரூ.347 கோடியாக அதிகரித்துள்ளது. அதே வேளையில் 2024 நிதியாண்டில், நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.1,586 கோடியாக உள்ளது.
தற்போது ஓலா-விடம் எலெக்ட்ரிக் கார் திட்டம் கைவிடப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த தலைமை நிர்வாக இயக்குநரான பவேஷ் அகர்வால், இப்போது அதற்கான வேலையில் ஈடுபடவில்லை என்றார்.