“கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க அனுமதி தேவை” – மத்திய அமைச்சரிடம் தமிழக மீனவர்கள் கோரிக்கை | Tamil Nadu fishermen request to Union Minister for permit to fishing in katchatheevu

1278958.jpg
Spread the love

ராமநாதபுரம்: “இந்திய அரசும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தை நடத்தி கச்சத்தீவு பகுதியில் குத்தகை அடிப்படையில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்” என மத்திய மீன்வளத்துறை அமைச்சரிடம் விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மதுரையில் நடைபெற்ற தேசிய மீன் விவசாயிகள் கருத்தரங்கில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் பங்கேற்றார். அதன்பின் இன்று ராமேசுவரம் வந்த மத்திய மீன்வளத்துறை அமைச்சர், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து தனுஷ்கோடி சென்று புயலால் அழிந்த நினைவுச் சின்னங்களையும், அரிச்சல் முனை கடற்கரைக்கு சென்று பார்வையிட்டார்.

அதன்பின் ராமேசுவரம் தனியார் தங்கும் விடுதியில் மத்திய அமைச்சரை, பாரம்பரிய இந்திய மீனவர் நலச்சங்க நிர்வாகிகள் சேசுராஜா, எமரிட், சகாயம் உள்ளிட்ட மீனவ சங்க நிர்வாகிகள் சந்தித்து, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், சிறைபிடிக்கப்பட்ட படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, “ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பராம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரமாக மீன்பிடித்தொழில் உள்ளது. பாக்ஜலசந்தி பகுதியில் மீன் பிடிக்கும் போது, இந்திய, இலங்கை கடல் எல்லைகள் அருகருகே இருப்பது தெரியாமல் மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று விடுகின்றனர்.

அப்போது இலங்கை கடற்படை தமிழக விசைப் படகுகளையும், மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்து சிறையில் அடைக்கிறது. மேலும் விசைப்படகுகள், வலைகளை பறிமுதல் செய்கிறது. மத்திய அரசு தலையீட்டால் மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். ஆனால் படகு ஓட்டுநர்களை விடுவிக்காமல் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

ரூ.30 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரையிலான விசைப்படகை பறிமுதல் செய்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.கடந்த 2018 முதல் இலங்கை அரசால் 160 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 5 மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜூன் 15 முதல் ஜூலை 11 வரை தமிழக மீனவர்கள் 74 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எனவே பாரம்பரிய கச்சத்தீவு பகுதியில் வாரத்தில் 3 நாட்கள் குத்தகை அடிப்படையில் மீன்பிடிக்க மத்திய அரசும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதித்தால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.

மேலும் 2021 முதல் 2023 வரை 15 விசைப்படகுகள் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன. ஒன்றரை ஆண்டுகளாக மீட்புக்குழுவினர் சென்று மீட்டு வர மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை. எனவே மீட்புக்குழுவினர் சென்று மீட்டு வர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கூறப்பட்டுள்ளது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *