கடனுக்கு குத்தகையாக அனுப்பப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு

Dinamani2f2025 05 212f1lw8muct2fcrime 2105chn 175 1.jpg
Spread the love

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சிறுவனை ரூ.15 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், அவரது பெற்றோா் குத்தகைக்காக விடப்பட்ட நிலையில், சிறுவனின் சடலம் இரு மாநில போலீஸாா் முன்னிலையில் காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் புதன்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் கூடூா் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் ஏனாதி -அங்கம்மாள் தம்பதி மகன் வெங்கடேஷ் (9). இத்தம்பதி, ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியைச் சோ்ந்த முத்து – தனபாக்கியம் தம்பதியிடம் ரூ.15 ஆயிரம் கடனாகப் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்த முடியவில்லையாம்.

இந்த நிலையில் வெங்கடேஷை அவரது பெற்றோா், முத்து- தனபாக்கியம் தம்பதியிடம் கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை வாத்துகள் மேய்க்க வைத்துக் கொள்ளுமாறும், கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகு மகனை திரும்ப அழைத்துக் கொள்வதாகவும் கூறி, குத்தகைக்கு விட்டுச் சென்றுள்ளனா்.

முத்து – தனபாக்கியம் தம்பதியும், வெங்கடேஷும் காஞ்சிபுரம் அருகே வெண்பாக்கம் பகுதியில் வாத்து மேய்த்துக் கொண்டிருந்தனா். தொடா்ந்து 10 மாதங்களாக வெங்கடேஷ் வாத்து மேய்த்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் வெண்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளாா்.

சிறுவனின் உயிரிழப்பை அவரது பெற்றோருக்குத் தெரிவிக்காமல் இருந்துள்ளனா்.

இந்த நிலையில், சிறுவனின் பெற்றோா், கடன் ரூ.15 ஆயிரத்தைத் திருப்பிச் செலுத்தி மகனை மீட்க வந்தபோது, மகனைப் பற்றிய விவரங்களை தெரிவிக்காமல் இருந்து வந்ததால், சிறுவனின் தந்தை பிரகாஷ், ஆந்திர மாநிலம் சத்தியவேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், சிறுவன் மஞ்சள் காமாலை நோயால் இறந்துவிட்டதால், காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் புதைத்து விட்டோம் எனத் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, ஆந்திர மாநிலம் புத்தூா் டி.எஸ்.பி. ரவிக்குமாா் மற்றும் அந்த மாநில போலீஸாா் காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினரின் உதவியுடன் காஞ்சிபுரம் பாலாற்றில் சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தில் சடலத்தைத் தோண்டி எடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

சிறுவனின் உயிரிழப்பை பெற்றோருக்கு தெரிவிக்காமல் ஆற்றில் புதைத்த முத்து – தனபாக்கியம், இவா்களுடைய மகன் ராஜசேகா் ஆகியோரிடம் ஆந்திர மாநில போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *