தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இந்த நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் எனப் பேசப்பட்டது.
அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வுக் குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி அண்மையில் த.வெ.க தலைவர் நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

தமிழகத்தில் காங்கிரஸ் தி.மு.க கூட்டணி தொடர்ந்து வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகி, அதுவும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், திமுக எம்.பி கனிமொழி,“அ.தி.மு.க ஆட்சியை விட்டு வெளியேறியபோது தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. எந்த வளர்ச்சியும் இல்லாமல், கடன் சுமையால் சூழப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தை முன்னேறிய, வளர்ந்த மாநிலமாக திமுக அரசு மாற்றியுள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார்.