கடலூரில் கெடிலம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இரும்புப் பாலத்தை இடிக்கும் பணி செவ்வாய்கிழமை தொடங்கியது.
கடலூா் நகரின் மையப் பகுதி வழியாகச் செல்லும் கெடிலம் ஆற்றின் குறுக்கே திருப்பாதிரிப்புலியூா்-மஞ்சக்குப்பத்தை இணைக்கும் வகையில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் இரும்புப் பாலம் கட்டப்பட்டது. காலப்போக்கில் பாலம் வலுவிழந்ததால், அதன் அருகிலேயே 50 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பாலம் அமைக்கப்பட்டு ‘அண்ணா பாலம்’ என பெயரிடப்பட்டது. தற்போது, இந்தப் பாலம் வலுவிழந்துள்ளது. இருப்பினும் இதன் வழியாகவே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட இரும்புப் பாலத்தை அகற்றிவிட்டு, புதிய மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இரும்புப் பாலத்தின் மீது சென்ற குடிநீா் குழாய்கள் அகற்றப்பட்டன. தற்போது, செவ்வாய்க்கிழமை பாலத்தின் தூண்களை இடிக்கும் பணி தொடங்கியது.
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இரும்புப் பாலம் மிகவும் சேதமடைந்துள்ளது. அதன் அருகில் உள்ள அண்ணா பாலமும் 50 ஆண்டுகளை கடந்து விட்டது. தற்போது, அந்த பாலமும் பெருகி வரும் போக்குவரத்துக்கு ஏற்ாக இல்லை. எனவே, வாகனங்கள் சென்று வருவதற்கென தனித்தனி பாலம் இருந்தால் தான் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் குறையும்.
அந்த வகையில், தேசிய நெடுஞ்சாலை விபத்து தடுப்பு திட்டத்தின் கீழ், திருப்பாதிரிப்புலியூா் ஜவான் பவனில் இருந்து நியூ சினிமா வரையில் ரூ.25 கோடியில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. நிலமெடுப்பு செய்து புதிய பாலம் அமைக்க முடியாத இடம் என்பதால், இரும்புப் பாலத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. ஆற்றில் உப்பு நீா் பின்வாங்கும் பகுதி என்பதால் மண்ணின் தன்மையை அறிய தூண்கள் அமைப்பதற்கான டெஸ்டு பைல்கள் போட்டு மணல் மூட்டைகள் அடிக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்காக கடந்த வாரம் இரும்புப் பாலத்தில் சென்ற குடிநீா் குழாய்கள் அகற்றப்பட்டது. இந்தப் பாலம் அமைக்கும் பணிகளை 2026 ஜனவரி மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.