இறுதியில் தாயாரின் வைராக்கியம் வென்றது. அவளை பூவராகருக்குத் திருமணம் செய்து வைத்தார் காத்யாயன ரிஷி. தேவர்கள் எல்லோரும் கூடி திருமால்-தாயாரை வணங்கியதால் அந்தத் தலம் திருமண வேண்டுதல் தலமாகவும் மாறியது என்கிறது இந்தத் தலத்தின் புராணம்.
பூவராகரும் தனது திருமணத்தின் பொருட்டு வேதநாராயணப் பெருமாளாக அழகிய வடிவுடன் காட்சி தந்தார். திருமணத்தின்போது நவரத்தின வளையல்களைச் சீராகக் கொடுத்தார் பூவராகர். அந்த வளையலை அம்புஜவல்லித் தாயார் அணிந்ததால், இந்த ஊருக்கே வளையன்மாதேவி என்ற திருப்பெயர் உண்டானதாம்.
பழைமையான இந்த ஆலயத்தின் கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வேதநாராயணப் பெருமாள் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார்.
மேலும் இங்கே எழுந்தருளி இருக்கும் தெய்வத் திருமேனிகள்; உற்சவர் வேதநாராயணப் பெருமாள் வீற்றிருந்த திருக்கோலம், நித்ய உற்சவர் வேதநாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலம், காளீயமர்த்தனர் – உற்சவர், ஆதி நாராயணப் பெருமாள் – வீற்றிருந்த திருக்கோலம், ஸ்ரீபூவராகப் பெருமாள் மூலவர் வீற்றிருந்த திருக்கோலம், பிராட்டியுடன் சக்கரவர்த்தித் திருமகன், இளையபெருமாள்,
அனுமார் – நின்ற திருக்கோலம், ஸ்ரீஆண்டாள் – மூலவர் உற்சவர் நின்ற திருக்கோலம், ஸ்ரீநம்மாழ்வார் திருமங்கையாழ்வார் – மூலவர் உற்சவர், ஸ்ரீதிருக்கச்சி நம்பிகள் – மூலவர், ஸ்ரீஉடையவர், ஸ்ரீமணவாள மாமுனிகள் – மூலவர் உற்சவர், ஸ்ரீகமலவல்லித் தாயார் – மூலவர் உற்சவர், காத்யாயன ரிஷி – மூலவர் வீற்றிருந்த திருக்கோலம், ஸ்ரீகருடர், ஸ்ரீஅனுமன் – மூலவர் நின்ற திருக்கோலம், விஷ்வக்சேனர் – வீற்றிருந்த திருக்கோலம்.

தீர்த்தம் பாவண தீர்த்தம். விமானம் பாவண விமானம். தல விருட்சம் புன்னை. சித்திரை பிரம்மோற்சவமும், வைகாசி திருக்கல்யாண உற்சவமும் இங்கு வெகு விசேஷம் என்கிறார்கள் இந்த ஊர் பக்தர்கள்.
மாதம்தோறும் வரும் ரோகிணி, அஸ்தம், திருவோணம், உத்திரம், ரேவதி ஆகிய நட்சத்திர தினங்கள் மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இங்கு விசேஷ ஆராதனைகள் நடைபெறும்.
இங்குள்ள பாவண தீர்த்தத்தில் நீராடி, பூவராகப் பெருமாளை, அம்புஜவல்லித் தாயாரை வேண்டி நைவேத்தியம் விநியோகித்தால் நினைத்த காரியங்கள் நல்லபடியாக நிறைவேறும். விரும்பிய வரன் அமையும் என்பது நம்பிக்கை.
பெருமாள் தான் விரும்பியபடி தாயாரை மணந்துகொண்ட தலம் என்பதால் இங்கு வந்து வேண்டிக்கொள்ள, வேண்டியவரைத் திருமணம் செய்துகொள்ளும் வரத்தைத் தன் பக்தர்களுக்கும் அருள்கிறார் என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.
வாழ்வில் நல்ல துணை அமையவும் மனதின் விருப்பங்கள் நிறைவேறவும் ஒருமுறை வளையன்மாதேவி சென்று வேதநாராயண பெருமாளை வழிபட்டு வருவோம்.
எப்படிச் செல்லாம்: கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது வளையமாதேவி. சேத்தியாத்தோப்பில் இருந்து பஸ் வசதி உள்ளது. ஆட்டோ வசதியும் உள்ளது.