கடல் ஆமைகள் இறப்பை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: அரசு விரிவான அறிக்கை அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு | Green Tribunal directs government to submit detailed report for Sea turtles die

1350048.jpg
Spread the love

சென்னை: கடல் ஆமைகள் இறப்பைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூர் முதல் கோவளம் வரை கடந்த மாதம் ஏராளமான கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கிய வண்ணம் இருந்தன. சுமார் 1000 ஆமைகள் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த ஆமைகள் கடல் வளத்தையும், மீன் வளத்தையும் பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

இவை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் பட்டியலில், முதலாவது பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றின் திடீர் இறப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆமைகள் இறப்பு தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தார். அது குறித்து அவர் அமர்வில் தெரிவித்ததாவது:

விசைப் படகுகளை தடை செய்யப்பட்ட பகுதியில் இயக்கிய 172 படகு உரிமையாளர்களின் மானியம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 30 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது தடை செய்யப்பட்ட பகுதிகளில் படகுகள் இயக்கப்படவில்லை. ஆந்திர மீனவர்களும், தமிழகத்தை ஒட்டிய, தடை விதிக்கப்பட்ட பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிவேகமாக இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உயிரிழந்த ஆமைகளின் தலையில் ஏற்பட்ட காயம், அதிர்ச்சி மற்றும் மூச்சு விட முடியாமல் உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டுமுதல் ஆமைகள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட அமர்வின் உறுப்பினர்கள், “ஆமைகள் இனப்பெருக்க காலமான ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை, குறிப்பிட்ட பகுதியில் விசைப்படகுகளை இயக்க தடை விதித்து 2015-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை ஏன் அமல்படுத்தவில்லை. தடை செய்யப்பட்ட பகுதியில் இயங்கும் படகுகளுக்கு அபராதமும், நிரந்தரத் தடையும் விதிக்க ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

அதுபோன்று தமிழகத்தில் உத்தரவு பிறப்பிக்கவில்லை. விதிமீறலில் ஈடுபட்டதாக 172 படகுகளின் மானியம் தற்காலிகமாக நிறுத்தியுள்ள அரசு ஏன் அனைத்து படகுகளையும் பறிமுதல் செய்யவில்லை. ஆமைகளை பாதுகாக்கும் டெட் வகை மீன்பிடி வலைகளை மீனவர்கள் பயன்படுத்துவதை ஏன் உறுதி செய்யவில்லை” எனக் கேள்வி எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து, “ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் அவை வரும் பகுதியில் விசைப்படகுகளை இயக்க தடை விதிக்க வேண்டும். விதிமீறலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆமைகள் இறப்பைத் தடுக்க மீன்வளத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை எடுத்து வரும் நடவடிக்கைகளை தலைமைச் செயலர் நேரடியாக கண்காணிக்க வேண்டும். ஆமைகள் இறப்பைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்ட அமர்வின் உறுப்பினர்கள், வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *