அ.தி.மு.க தலைமையிலான தே.ஜ கூட்டணியில், பா.ஜ.க-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி பங்கீடு முடிந்துள்ள நிலையில், வெற்றி வாய்ப்பு குறைவான தொகுதிகளையே அ.தி.மு.க தங்கள் தலையில் கட்டிவிட்டதாகப் புலம்பித் தீர்க்கிறார்கள் பா.ஜ.க-வினர். குறிப்பாக, ஆறு அமைச்சர் தொகுதிகளை பா.ஜ.க-விடம் அ.தி.மு.க தள்ளிவிட்டிருப்பது, கமலாலயத்தில் பெரும் புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது. கடந்த மார்ச் 26-ம் தேதி சென்னை வந்திருந்த பா.ஜ.க-வின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளரான பி.எல்.சந்தோஷ், தொகுதிப் பங்கீட்டில் தன்னுடைய வருத்தத்தை சற்று காட்டமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதுதொடர்பாக நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் சீனியர் நிர்வாகிகள், “பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதிகளில், கோவை வடக்கு, மொடக்குறிச்சி, அவிநாசி, நாகர்கோவில் தொகுதிகள் மட்டுமே கடந்த தேர்தலில் ஜெயித்தவை. மற்ற 23 தொகுதிகளும் தே.ஜ கூட்டணி தோற்ற தொகுதிகள். அதையெல்லாம் எங்கள் தலையில் கட்டிவிட்டது அ.தி.மு.க. அதில், பி.எல்.சந்தோஷ் ரொம்பவும் அப்செட். கமலாலயத்தின் அரங்கராஜன் அரங்கில் நிர்வாகிகளுடன் கலந்துரையாடும்போது, “இதுதான் சீட் பங்கீடா… நமக்கு பலமான தொகுதிகளைக் கேட்டுப் பெற்றிருக்க வேண்டாமா… திருவாரூரில் தி.மு.க வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட நம்மிடம் வலுவான ஆளே இல்லை. அதற்குப் பதிலாக கும்பகோணத்தைப் பெற்றிருக்கலாமே? சென்னையிலும் கோவையிலும் நாம் வலுவாக இருக்கிறோம். அங்கேயெல்லாம் ஒரேயொரு தொகுதிதான் நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் என்ன தொகுதிப் பங்கீடு பேசுனீர்கள்?’ என்று கொதித்துப் பேசினார். அருகிலிருந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனால் எதுவுமே பேச முடியவில்லை.